நோன்புக் காலத்தை முன்னிட்டு 106 வசதி குறைந்த குடும்பங்களுக்கு ‘நியூ காலேஜ் முன்னாள் மாணவர் சங்கத்தினர்’ ( New College Alumni Association) அன்பளிப்புப் பைகளை வழங்கியுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கம் குழு நடவடிக்கைகளுடன் சமூகம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் சிங்கப்பூரில் வசதி குறைந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு நோன்புக் காலங்களில் உதவும் நோக்கில் மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளை இந்த ஆண்டு வழங்கினர். மார்ச் 23ஆம் தேதி, கம்போங் டெல்டா பள்ளிவாசலில் (Masjid kampong delta) அன்பளிப்புப் பைகள் விநியோகிக்கப்பட்டன.
சங்கத்தினர் இதற்காக ஏறத்தாழ 6,000 வெள்ளி நன்கொடையளித்துள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, எண்ணெய், மாவு வகைகள், பேரீச்சைப் பழங்கள் உள்ளிட்டவை அடங்கிய 70 வெள்ளி மதிப்புள்ள பைகள் வழங்கப்பட்டதாகக் கூறினார் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் முகமது அஸ்லாம்,45.
மொத்தம் 91 குடும்பங்கள் பள்ளிவாசலுக்கு நேரில் வந்து வாங்கிச் சென்றதாகவும் மூத்தோர் 15 பேருக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று விநியோகித்ததாகவும் தெரிவித்தார் சங்கப் பொருளாளர் முகமது சாதிக், 54.
பண்டிகை நாள் என்பது அனைவருக்கும் குதூகலம் அளிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து, குறையின்றிப் பண்டிகை கொண்டாடுவதை உறுதிசெய்வது அவசியம். அந்த எண்ணத்தின் நீட்சிதான் இந்த முன்னெடுப்பு என்று சொன்னார் இவ்வமைப்பின் தலைவர் அர்ஷத் அலி, 54.
கம்போங் டெல்டா பள்ளிவாசல் தொண்டூழியரான அப்துல் அஜீஸ், 65, அன்பளிப்புப் பைகள் கொடுக்க சங்கம் முன்வந்துள்ளதும் அதற்குப் பங்களிப்பதும் மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“எங்கள் சங்கம் மூலம் பிற நாடுகளில் இயற்கைச் சீற்றத்தாலோ போராலோ அவதியுறும் மக்களுக்கு உதவும் நோக்கில் நிதி திரட்டியுள்ளோம். சிங்கப்பூர் சமூகத்திற்கு திருப்பியளிக்கும் நோக்கில் உள்ளூரில் செய்யப்படும் இந்த முதல் முன்னெடுப்பு மனநிறைவைத் தருகிறது,” என்றார் சங்கத்தின் செயளாலர் ஹாருன் பிலால், 52.
இதுபோன்ற முன்னெடுப்புகள் தொடர்ந்து ஆண்டுதோறும், மாதந்தோறும் நடைபெற வேண்டும் என்று விரும்புவதாகவும் அந்த இலக்கை நோக்கிப் பயணம் செய்ய எண்ணம் கொண்டுள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

