2024 ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த சிங்கப்பூர் குழந்தைகளின் வேலை செய்யும் தகுதியுடைய தந்தையருக்கு, சம்பளத்துடன் கூடிய தந்தையர் விடுப்பு இரண்டு வாரங்களிலிருந்து நான்கு வாரங்களாக இரட்டிப்பாக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
தொடக்கமாக, அந்தக் கூடுதல் இரு வாரங்கள் விருப்பின் பேரில் அமையும். கூடுதல் விடுப்பை வழங்கத் தயாராக இருக்கும் முதலாளிகளுக்கு அரசாங்கம் அதற்கான செலவை ஏற்கும் என்றார் அவர்.
"இந்த மாற்றத்திற்கு ஆயத்தமாக முதலாளிகளுக்கு கூடுதல் கால அவகாசம் தரும் வகையில் கூடுதல் இரண்டு வார தந்தையர் விடுப்பைக் கட்டாயமாக்கவில்லை. குறிப்பாக, தற்போதைய பொருளியல் நிலையுடன் முதலாளிகள் பலர் எதிர்நோக்கும் மனிதவள, செயல்முறை சவால்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று திரு வோங் தெரிவித்தார்.
இத்திட்டம் காலப்போக்கில் மறுஆய்வு செய்யப்படும் என்றார் அவர். எதிர்காலத்தில் இந்தக் கூடுதல் இரண்டு வாரத் தந்தையர் விடுப்பைக் கட்டாயமாக்குவதே இலக்கு என்று அவர் கூறினார்.

