சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டு கிராப் டாக்சியில் பயணம் செய்தபோது பயணி ஒருவர் விபத்தில் சிக்கினார்.
சாலையில் சிவப்பு விளக்கு எரிந்த நிலையில் கார் ஓட்டுநர் சாலையைக் கடந்தார். அப்போது அந்தக் கார் விபத்தில் சிக்கியது. காரில் பயணம் செய்த பயணிக்குக் காயம் ஏற்பட்டது.
விபத்துச் சம்பவம், 2021ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி இரவு 8 மணிவாக்கில் மேக்ஸ்வெல் ரோடு, ஆன்சன் ரோடு சந்திப்பில் நேர்ந்தது.
இந்நிலையில், தமது மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளைக் கார் ஓட்டுநர் முழுமையாக ஏற்க வேண்டும் என்று பயணி வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இருக்கை வார் அணியாத பயணியும் ஒருவிதத்தில் தவறு செய்தவர்தான் என்று குறிப்பிட்டார். அதனால் 20 விழுக்காடு இழப்பீடு கொடுக்கப்படாது என்று தீர்ப்பு வழங்கினார்.
பயணியின் தரப்பு மேல்முறையீடு செய்யவுள்ளது.
“தாம் காரில் பயணம் செய்த ஒரு நிமிடத்திற்குள் விபத்து நேர்ந்தது. இருக்கை வார் அணியப் போதுமான நேரமில்லை,” என்று பயணி கூறினார்.
ஆனால் நீதிபதி, “ஒருவர் இருக்கை வார் அணிய 20 வினாடிகள் போதும்,” என்று குறிப்பிட்டார். மேலும், வாகனத்தில் பயணம் செய்யும் போது பயணிகளும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

