கடலின் ஆழத்தையும் மிஞ்சிய காதலைக் கடல்மீது கொண்டுள்ளார் தன் குடும்பத்தின் முதலாவது முழுநேரக் கடற்படைவீரர் லெஃப்டினென்ட் சாந்தினி ரமணி, 25.
“கப்பல்கள் கடலுக்குச் செல்லும் காணொளிகளைப் பார்க்க எனக்கு எப்போதும் பிடிக்கும். அத்துடன், நாட்டுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்காற்றவும் விரும்பினேன்,” என்றார் சாந்தினி.
தேசிய தினமும் கடலில் இடம்பெறும் ஒரு மாத கடற்படைப் பயிற்சியும் (Midshipman Sea Training Deployment) ஒரே சமயம் வந்ததால், சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கடலில், கடற்படைவீரராகக் கொண்டாடும் பெருமையைப் பெற்றார் சாந்தினி.
சிங்கப்பூர் ஆயுதப்படை ராணுவப் பயிற்சிக் கழகத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 13) நடந்த 139/25 பயிற்சி அதிகாரி பதவி நியமன அணிவகுப்பில் பதவி நியமனம் பெற்ற 405 பயிற்சி அதிகாரிகளில் அவரும் ஒருவர்.
அணிவகுப்பை மேற்பார்வையிடும் அதிகாரியாகப் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா வருகையளித்தார்.
நாட்டுப்பற்று என்பது சாந்தினியின் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. தம் சகோதரர்களில் இருவர் சிங்கப்பூர் ஆயுதப்படையிலும் மற்றொருவர் காவல்துறையிலும் முழுநேரப் படையினராகச் சேவையாற்றுவதைக் கண்டு வளர்ந்த சாந்தினிக்கு, குடும்பத்திலேயே சிறந்த முன்னுதாரணங்கள் உள்ளனர்.
“அவர்களைச் சீருடையில் கண்டு பெருமிதம் கொள்வேன். முகாம்களுக்குச் செல்லும்போது என்னென்ன எடுத்துச் செல்கிறார்கள் என்பதை நான் கூர்ந்து கவனிப்பேன். அவர்களின் முக்கிய மைற்கல் அணிவகுப்புகளுக்கு நானும் சென்றுள்ளேன்,” என்றார் சாந்தினி.
அவர் ஆண்டுதோறும் எங்கிருந்தாலும் தேசிய தின அணிவகுப்பைத் தவறாமல் கண்டு பெருமைப்படுவார்.
தொடர்புடைய செய்திகள்
பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதலாம் ஆண்டில் வேலைவாய்ப்புக் கண்காட்சியில்தான் கடற்படையில் சேரும் இலக்கில் உறுதியான சாந்தினி, கணக்காய்வில் தன் பட்டப்படிப்பை முடித்ததும் கடற்படையில் சேர்ந்தார்.
சென்ற அக்டோபரிலிருந்து ஒன்பது வார அடிப்படை ராணுவப் பயிற்சியும் பின்பு ஒன்பது மாத பயிற்சியதிகாரிப் பயிற்சியும் மேற்கொண்டார் சாந்தினி.
கப்பலின் தலைவராகக் கப்பலை வழிநடத்த ஆணைகளைப் பிறப்பிப்பது, எதிர்வரும் கப்பல்களைக் கண்காணிப்பது, கப்பலில் ஆயுதக் கட்டமைப்புகளைக் கையாள்வது, நீச்சல் போன்றவற்றில் பயிற்சி பெற்றுள்ளார் சாந்தினி.
“நான் என் முடிவைக் கூறிய நாள் முதல் இன்றுவரை என் பெற்றோரும் அண்ணன்களும் எனக்குப் பெரும் ஆதரவளித்துள்ளனர்,” என்றார் சாந்தினி.
கடற்படையில் தன்னால் மறக்கமுடியாத அனுபவம், இவ்வாண்டின் ‘நேவி@விவோ’யில், கப்பல் பற்றி பொதுமக்களிடம் விளக்கியதே என்றார் சாந்தினி. “அதுவரை நான் பொதுமக்களில் ஒருவராகத்தான் கப்பலுக்குச் சென்றிருந்தேன். இம்முறைக் கடற்படையினராக என் அனுபவங்களைப் பகிரமுடிந்ததில் மகிழ்ச்சியடைந்தேன்,” என்றார் சாந்தினி.
தன்னைப் போல் கடற்படையில் சேர விரும்புவோருக்குச் சாந்தினி கூறுவது, “உங்களுக்கு ஆர்வமிருந்தால், பங்களிக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தால், தைரியமாக முன்வாருங்கள்,” என்பதே.
சேவை மனப்பான்மைக் கொண்ட தலைமைத்துவம்
தகுதிசார் வாள் (Sword of Merit) விருதை வென்ற இரண்டாம் லெஃப்டினென்ட் மணி லோகேஷ்வரன், 19, தன் குடும்பத்திலேயே தேசிய சேவையாற்றிய முதல் ராணுவ வீரர்.
அணிவகுப்பில் பதவி நியமனம் பெற்ற பயிற்சி அதிகாரிகளில் தலைசிறந்த 10 விழுக்காட்டினரில் வந்தமைக்காக அவர் தகுதிசார் வாள் விருதைப் பெற்றார். அவர் தளவாடப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி.
“இவ்விருதை நான் என் தனியொருவர் உழைப்பினால் பெறவில்லை. குடும்ப ஆதரவு, சிறந்த பயிற்றுவிப்பாளர்கள், புரிந்துணர்வுமிக்க நண்பர்கள் ஆகியோரால்தான் இது சாத்தியமானது,” என்றார் லோகேஷ்வரன்.
சிறந்த தலைவருக்கு முன்னுதாரணமாகத் தான் எடுத்துக்கொண்டது, தன் அடிப்படை ராணுவப் பயிற்சியின்போது தன் அணியை வழிநடத்திய சார்ஜண்ட் கிறிஸ்டோஃபர் கூ அன் என்றார் லோகேஷ்வரன்.
“அவரால் பயிற்சியதிகாரிப் பள்ளிக்குச் செல்ல இயலாவிட்டாலும் அவர் மனந்தளரவில்லை. ராணுவத்துக்குப் புதிதாக வந்துள்ள வீரர்கள்மீது அதிக அக்கறைக் காட்டினார். அவரைப் போன்ற தலைவராக நானும் வளர விரும்பினேன்,” என்றார் லோகேஷ்வரன்.
பயிற்சிகள் கடினமாகும்போது சுற்றியிருப்பவர்கள் நலமாக இருக்கிறார்களா, பளுவைப் பகிரமுடியுமா எனச் சிந்தித்து லோகேஷ்வரனும் மற்ற வீரர்களும் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர்.
லோகேஷ்வரனுக்குச் சிறுவயதிலிருந்தே சேவை மனப்பான்மை இருந்துள்ளது. தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளியிலிருந்தே அவர் தன் நண்பர்களுடன் அறநிறுவனங்களைத் தொடர்புகொண்டு, தனியாக வாழும் முதியோரைச் சந்தித்து அவர்களுக்குத் துணையாக இருந்துள்ளார்.
ஆங்கிலோ சீனத் தொடக்கக் கல்லூரியிலிருந்தபோது அவர் தன் நண்பர்களுடன் பண்டிகைக்காலங்களில் ஓரறை, ஈரறை வீட்டில் தங்குவோருக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்தார். கல்லூரியின் மாணவ மன்ற உறுப்பினராக, மாணவர் நலத் திட்டங்களை வழிநடத்தும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.
“என்னைச் சுற்றியுள்ளோரின் கஷ்டங்களை அந்த அனுபவங்கள் எனக்குக் காட்டின. பிறர்மீது அக்கறைக் கொண்டு அவர்களுக்குத் தலைசிறந்ததைச் செய்ய என்னை ஊக்கப்படுத்தின,” என்றார் லோகேஷ்வரன். தொடக்கக் கல்லூரியின் விவாத அணியில் இருந்தது அவரது தன்னம்பிக்கையையும் வளர்த்தது.
“ஒரு தலைவராக நான் என் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பேன். அவர்கள் எதற்காகத் தேசிய சேவை செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஊக்கமளிப்பேன். அப்போதுதான் அவர்கள் இன்னும் மகிழ்ச்சியாகவும் ஈடுபாட்டுடனும் நாட்டின் பாதுகாப்புக்குப் பங்காற்றுவர்,” என்றார் லோகேஷ்வரன்.

