புகைமூட்டம்: ‘ஃபயர்ஃபிளை’ விமானச் சேவை ரத்து அக்டோபர் 13 வரை நீட்டிப்பு

புகைமூட்டம்: ‘ஃபயர்ஃபிளை’ விமானச் சேவை ரத்து அக்டோபர் 13 வரை நீட்டிப்பு

படம்: சாவ்பாவ்

12 Oct 2026 - 6:34 pm

1 mins read

சிங்கப்பூரின் சிலேத்தார் விமான நிலையத்துக்கும் மலேசியாவின் சுபாங் விமான நிலையத்துக்கும் இடையிலான தனது விமானச் சேவை ரத்தை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) வரை மலேசியாவின் ‘ஃபயர்ஃபிளை’ விமான நிறுவனம் மேலும் ஒரு நாளுக்கு நீட்டித்துள்ளது.

மோசமடைந்துவரும் வானிலை, புகைமூட்ட நிலைமையைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அக்டோபர் 10 முதல் 12ஆம் தேதி வரை இந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நான்காவது நாளாகவும் இந்த ரத்து நடவடிக்கை தொடர்கிறது.

மலேசிய ஏர்லைன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ‘ஃபயர்ஃபிளை’ நிறுவனம், இரட்டைப் பொறி கொண்ட ‘டர்போபிராப்’ ரக விமானங்களை இயக்கி வருகிறது. விமானச் ரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள், இருக்கை வசதிக்கு ஏற்ப, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கும் சாங்கி விமான நிலையத்துக்கும் இடையே இயக்கப்படும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானச் சேவைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த மாற்று விமானச் சேவையைப் பயன்படுத்த விரும்பாத பயணிகளுக்கு, அவர்கள் செலுத்திய முழுத் தொகையும் 30 வேலை நாள்களுக்குள் அவர்களது வங்கி அல்லது கடன் அட்டைக் கணக்கில் திரும்பச் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவிமானச் சேவைரத்துபுகைமூட்டம்சிலேத்தார்