புகைமூட்டம் காரணமாக, சிங்கப்பூரின் சிலேத்தார் விமான நிலையத்திற்கும் மலேசியாவின் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்திற்கும் இடையே அக்டோபர் 10 முதல் அக்டோபர் 12 வரை அனைத்து ‘ஃபயர்ஃபிளை’ (Firefly) விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள், விமான இருக்கைகள் கிடைக்கப்பெறுவதைப் பொறுத்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் சாங்கி விமான நிலையத்திற்கும் இடையே இயங்கும் மலேசியா ஏர்லைன்ஸ் விமானச் சேவைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாக ‘ஃபயர்ஃபிளை’ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மாற்றிவிடப்பட்ட விமானப் பயணத்தில் தொடர விரும்பாத பயணிகள் முழுத் தொகையையும் திரும்பப்பெற தகுதிபெறுவர். அத்தொகை 30 வேலை நாள்களுக்குள் அவர்கள் பணம் செலுத்திய கணக்கிற்கே திருப்பி அனுப்பப்படும் என்று பேச்சாளர் கூறினார்.
“பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களையும் இடையூறுகளையும் குறைக்கும் அதே வேளையில், செயல்பாட்டுப் பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கண்ட அக்டோபர் 10ஆம் தேதியிடப்பட்ட ரத்து அறிவிப்பில், புகைமூட்ட அதிகரிப்பு, குறைந்த பார்வைத்திறன் காரணமாக அக்டோபர் 10ஆம் தேதி சிலேத்தாரிலிருந்து சுபாங் புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
“எங்களது பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கே நாங்கள் முதன்மை முன்னுரிமை அளிக்கிறோம். வானிலை, புகைமூட்டச் சூழலை எங்களது செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு நிலையம் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது,” என்று அக்டோபர் 11ஆம் தேதி ‘ஃபயர்ஃபிளை’ தெரிவித்தது.
