புகைமூட்டம்: 5ல் 3 வட்டாரங்களில் மிதமான நிலையில் காற்றுத்தரம்

புகைமூட்டம்: 5ல் 3 வட்டாரங்களில் மிதமான நிலையில் காற்றுத்தரம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Oct 2026 - 9:42 am

1 mins read

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) காலை வேளையில் காற்றின் தரம் மேம்பட்டிருந்தது. தீவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மிதமான நிலையில் இருந்தது.

காலை 9.30 மணி நிலவரப்படி, 24 மணிநேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 89க்கும் 125க்கும் இடைப்பட்டிருந்தது. அது மேற்கில் 125ஆகவும் மத்தியப் பகுதியில் 114ஆகவும் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.

குறியீடு, 51க்கும் 100க்கும் இடைப்பட்டிருக்கும்போது காற்றின் தரம் மிதமானதாகவும் 101லிருந்து 200க்குள் இருக்கும்போது ஆரோக்கியமற்றதாகவும் 200ஐத் தாண்டினால் மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் கருதப்படும்.

சிங்கப்பூரில் புகைமூட்ட நிலைமை திங்கட்கிழமை முதலே மேம்படத் தொடங்கியது. அன்று காலை 10 மணியிலிருந்து ஐந்தில் மூன்று வட்டாரங்கள் மிதமான காற்றுத் தரத்தைப் பதிவு செய்துள்ளன.

பெரும்பாலான நாள்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு, ஆரோக்கியமற்ற அல்லது மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் நீடித்த கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, நிலைமை மேம்பட்டுள்ளது.

இதற்கிடையே, மணிக்கு ஒருமுறை பதிவாகும் பிஎம்2.5 குறியீடு, வழக்கமான நிலைக்கும் அதிகப்படியான நிலைக்கும் இடையே இருந்தது. பிஎம்2.5 குறியீடு, காற்றில் கலந்துள்ள நுண்துகள்களைக் கணக்கிடுகிறது.

காலை 9.30 மணிக்கு, வடக்கில் (44) பிஎம்2.5 குறியீடு சாதாரண வரம்பில் இருந்தது. அதேநேரம், தீவின் தெற்கில் (58), கிழக்கில் (62), மேற்கில் (84), மத்தியப் பகுதியில் (78) என உயர்ந்த நிலையில் பதிவாகியிருந்தது.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்சிங்கப்பூர்காற்றுத்தரம்தூய்மைக்கேடுகுறியீடு