உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) காலை 9.43 மணியளவில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், மலேசியாவிலிருந்து நீண்டுள்ள வாகன வரிசையே இதற்குக் காரணம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
காலை 11.20 மணியளவில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் போக்குவரத்துக் கண்காணிப்புக் கருவிகளைப் பார்த்தபோது, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியின் வெளியேறும் தடங்கள் வரை வாகனங்கள் நெருக்கமாக அணிவகுத்து நிற்பதைக் காணமுடிந்தது.
அதேவேளையில், உட்லண்ட்ஸ் கிராசிங்கிலும் உட்லண்ட்ஸ் மேம்பாலத்திலும் போக்குவரத்துவழக்கம்போல சீராக உள்ளது.
சனிக்கிழமையும் இதேபோன்று நெரிசல் ஏற்பட்டதாக ஆணையம் தெரிவித்திருந்தது. அன்று காலை 7.07 மணிக்குத் தொடங்கிய கடும் நெரிசல், இரவு 10.57 மணியளவிலேயே தணிந்தது.
பயணத் தாமதங்களை எதிர்நோக்கலாம் என்றும் பயணத்தைத் தொடங்கும் முன் அண்மைய போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்க்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டிறுதி விடுமுறைக் காலத்தை முன்னிட்டு, நவம்பர் 20ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 3 வரை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் அதிக பயணிகள் கூடுவர் என ஆணையம் நவம்பர் 11ஆம் தேதி எச்சரித்திருந்தது.
முன்னதாக, நவம்பர் 6 முதல் 9 வரையிலான தீபாவளி நீண்ட வார இறுதியில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் எல்லையைக் கடந்தனர்.
குறிப்பாக, நவம்பர் 6ஆம் தேதி 553,000க்கும் அதிகமானோர் இரு நிலச் சோதனைச்சாவடிகள் வழியாகப் பயணித்தனர்.
