சிங்கப்பூரில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்கள், உயரக் கட்டுப்பாடுகள் குறித்த மறுஆய்வைத் தொடர்ந்து இப்போது உயரமானதாகக் கட்டப்படலாம். அதன்படி, குடியிருப்புக் கட்டடங்கள் 15 மாடிகள் வரையும் தொழிற்சாலை அல்லது வணிகக் கட்டடங்கள் 9 மாடிகள் வரையும் கட்டப்பட வாய்ப்புள்ளது.
விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள கட்டடங்களும் கட்டமைப்புகளும் எவ்வளவு உயரமாக இருக்கலாம் என்பது குறித்த தனது விதிகளை அனைத்துலக வழிமுறைகளுக்கு ஏற்ப புதுப்பித்துள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்தது.
“ஒவ்வொரு விமான நிலையத்திலும் குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்ப சிங்கப்பூரில் உள்ள விமான நடவடிக்கைகளைப் பாதுகாக்க திருத்தப்பட்ட விதிமுறைகள் உதவும். மேலும், சிங்கப்பூரில் உள்ள விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கூடுதல் வான்வெளியை மேம்பாட்டிற்காக விடுவிக்கவும் இவை உதவும்.
“குறிப்பாக, சிங்கப்பூரின் சில பகுதிகளில் கட்டட உயர வரம்புகளையும் மேம்பாடுகளையும் அதிகரிக்க இது வாய்ப்புகளை வழங்கும்,” என்று ஆணையம் கூறியது.
உள்கட்டமைப்புத் திறனையும் தரமான நகர்ப்புற வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும் தேவையையும் கருத்தில்கொண்டு, விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள எதிர்காலக் கட்டட மேம்பாடுகள் எவ்வளவு உயரமாகவும் நெருக்கமாகவும் இருக்கலாம் என்பதை அரசாங்க அமைப்புகள் இன்னும் ஆராய்ந்து வருவதாக ஆணையம் சொன்னது.

