உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் ஒரு பேருந்தை மோதியபின், காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிய ‘கெட்கோ’ கார் ஓட்டுநரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
கடந்த புதன்கிழமை (டிசம்பர் 10) உட்லண்ட்ஸ் அவென்யு 6ல் விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடிய சம்பவம் பற்றிய தகவல் இரவு 9.50 மணியளவில் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
காவல்துறை வருவதற்குள் அந்தக் கார் ஓட்டுநர் அவர் ஓட்டிவந்த கெட்கோ காரை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டார். அவரை அடையாளம் காணும் பணிகள் விசாரணையின் அங்கமாக நடந்துவருவதாக காவல்துறை கூறியது.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உதவிக்கான அழைப்பு வரவில்லை என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்துள்ளது.
விபத்துக்குப் பிறகு சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டக் காணொளியில் கெட்கோ கார், பேருந்தின் பின்பகுதியை மோதியிருப்பதைக் காணமுடிந்தது. காரின் முன்புறம் பலத்த சேதமடைந்துள்ளதும் அதன் உள்பாகங்கள் வெளிப்படுவதும் தெரிகிறது. பொதுமக்கள் சாலை ஓரத்தில் விபத்தைப் பார்வையிடுவதும் காணொளியில் உள்ளது.
குறுகிய கால வாகன வாடகை மற்றும் பகிர்வு நிறுவனமான கெட்கோ, விபத்து பற்றி அறிந்துள்ளதாக குறிப்பிட்டது.
“எங்களது சேவைகளைப் பயன்படுத்துவோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்பு முதன்மையானது. சம்பந்தப்பட்டோருக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் தயாராக உள்ளோம்” என்று அது தெரிவித்தது.

