எல்இடி அஞ்சலிப் பலகை விழுந்து மாது காயம்

2 mins read
f8c91326-214d-41c7-bdc4-d3b6c79402da
இடது படம்: எல்இடி அஞ்சலிப் பலகை விழுந்ததன் காரணமாக காயமடைந்த திருமதி கூவின் பற்களின் துண்டுகள், அவரது கையில் காணப்படும் ரத்தம். வலது படம்: விபத்துக்குப் பிறகு எல்இடி அஞ்சலிப் பலகைகள் பின்னால் கட்டப்பட்டுள்ளன. - படங்கள்: திருமதி கூ

அக்டோபர் 2ஆம் தேதி தனது இரண்டு இளைய குழந்தைகளுடன், திருமதி கூ சிறுவர் தினத்தைக் கொண்டாடினார். மேலும் தனது மூத்த மகனுக்கு மதிய உணவை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவர் வசிக்கும் அங் மோ கியோ பேட்டையில் உள்ள நடைபாதையில், அருகிலுள்ள ஒரு புல்வெளியில் சுமார் பத்து எல்இடி அஞ்சலிப் பலகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

அவர் நடந்து செல்லும்போது, ​​பலத்த காற்று வீசியதால், எல்இடி அஞ்சலிப் பலகைகள் கீழே விழுந்தன. அவற்றில் மிகவும் கனமான ஓர் அஞ்சலிப் பலகை 44 வயதான அந்த மாதின் மீது விழுந்து, அவருடைய இரண்டு முன் பற்களில் பாதியைத் துண்டித்தது. மேலும் அவருடைய கன்னத்திலும் தோளிலும் காயத்தை ஏற்படுத்தியது.

கண்விழிப்புச் சடங்கில் இருந்த இரண்டு பேர் அவர் மீது விழுந்து கிடந்த அஞ்சலிப் பலகையைத் தூக்க ஓடிவந்தனர். ஆம்புலன்சை அழைக்கவும் அவர்கள் முன்வந்தனர். ஆனால், அந்த மாது அதனை மறுத்துவிட்டார். அவர் தனது கணவருக்குத் தொடர்புகொண்டார்.

காயத்தால் ஏற்பட்ட வலி ஒருபுறம் இருக்க, அவரை மிகவும் பாதித்தது சம்பவ இடத்தில் இருந்தவர்களின் பொறுப்பற்ற தன்மைதான் என்று சொன்னார்.

“அஞ்சலிப் பலகைகள் ஏன் விழுந்தன என எல்லாரும் ஒருவரை ஒருவர் பழி சுமத்திக் கொண்டிருந்தார்கள்,” என்று அவர் கூறினார். துக்கத்திலிருந்த குடும்பத்தினர் அஞ்சலிப் பலகைகள் நண்பர்களிடமிருந்து வந்தவை என்று கூறினர். அதே நேரத்தில் இறுதிச் சடங்கு இல்லத்தின் ஊழியர்கள் நடைபாதைக்கு அருகில் அஞ்சலிப் பலகைகளை வைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

“எனக்குத் தொடர்ந்து வலி இருந்து வந்தது,” என்று திருமதி கூ கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக, தமது முன்பற்களில் பாதி உடைந்த நிலையில் வாயைத் திறக்கும் போதெல்லாம் அது சங்கடமாக இருந்தது என்றார்.

அந்த விபத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட தரப்பினர் யாரும் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை.

“நான் ஆரோக்கியமான பெண்,” என்று அவர் கூறினார். “இந்த விபத்தில் சம்பந்தப்பட்டவர் ஒரு சிறு வயது குழந்தையாகவோ ஒரு முதியவராகவோ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகள் ஏதாவது செய்வதற்கு முன்பு ஒரு மரணம் அல்லது மிகக் கடுமையான காயங்கள் ஏற்படும் வரை காத்திருக்கப் போகிறார்களா?” என்று வினவினார்.

விபத்துக்குப் பிறகு நகர மன்றத்தின் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் குடும்பத்தினரால் ஈடுபடுத்தப்பட்ட விற்பனையாளர்கள், அஞ்சலிப் பலகைகள் முறையாகக் கட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக அவற்றைப் பரிசோதித்தனர்.

எல்இடி அஞ்சலிப் பலகைகளின் பயன்பாடு குறித்து, இறுதிச் சடங்கு நிறுவனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாக நகர மன்றம் தெரிவித்துள்ளது. அதற்கு உட்படுவதாகக் கூறித்தான் அந்நிறுவனங்கள் விண்ணப்பத்தில் கையெழுத்திடுகின்றன என்றும் மன்றம் கூறியது.

குறிப்புச் சொற்கள்