வீடு புகுந்து கொள்ளை: சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்

2 mins read
fd1c94fb-919b-41f6-aa58-55d800147bf7
சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 40 வயது சீன நாட்டவர் ஹுவாங் சியாவ்சோங்.   - படம்: ‌ஷின் மின்

மூன்று தனியார் வீடுகளில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 40 வயது சீன நாட்டவர், விசாரணைக்காகத் திங்கட்கிழமை (டிசம்பர் 15) காலை சிராங்கூன் கார்டன்ஸில் உள்ள சம்பவ இடங்களில் ஒன்றுக்குக் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

டிசம்பர் 7ஆம் தேதி இரவு சுமார் 8.40 மணிக்கு சுவான் டிரைவில் உள்ள ஒரு வீட்டின் சுவர்மீது ஏறிக்குதித்து உள்ளே சென்று நகைகளைத் திருடியதாக ஹுவாங் சியாவ்சோங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருள்களில் திருமண மோதிரங்கள் உட்பட வைரம் பதிக்கப்பட்ட பதக்கம் கழுத்துச் சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் முதலியவை அடங்கும். நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த நகைகளின் மொத்த மதிப்பு சுமார் S$47,750.

வெள்ளி நிற வாகனம் ஒன்றில் காலை 10.55 மணியளவில் அந்தத் தனியார் வீடு இருக்கும் பகுதிக்கு ஹுவாங் அழைத்துச் செல்லப்பட்டார்.

திருட்டுச் சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகே அவர் விசாரிக்கப்பட்டார். கேள்விகளுக்குத் தலையசைத்தும் சைகைகள் மூலமும் பதிலளித்த அவர், தலையைக் குனிந்தபடியே இருந்தார்.

வெள்ளை டி-சட்டையும் கறுப்புக் கால் சட்டையும் அணிந்து கால்களிலும் கைகளிலும் விலங்கிடப்பட்ட நிலையில் ஹுவாங் காணப்பட்டார். 
வெள்ளை டி-சட்டையும் கறுப்புக் கால் சட்டையும் அணிந்து கால்களிலும் கைகளிலும் விலங்கிடப்பட்ட நிலையில் ஹுவாங் காணப்பட்டார்.  - படம்: யோகிதா அன்புச்செழியன்

வெள்ளை டி-சட்டையும் கறுப்புக் கால் சட்டையும் அணிந்து கால்களிலும் கைகளிலும் விலங்கிடப்பட்ட நிலையில் ஹுவாங் காணப்பட்டார்.

கிட்டத்தட்ட 10 நிமிடம் அங்கிருந்த பிறகு மீண்டும் வாகனத்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

சிராங்கூன் கார்டன்ஸில் உள்ள லி ஹுவான் குளோசிலும் செந்தோசா தீவிலும் டிசம்பர் 7, 8ஆம் தேதிகளில் நடந்த இரண்டுக் கொள்ளைச் சம்பவங்களிலும் ஹுவாங்கிற்குத் தொடர்பிருக்கக்கூடும் என்று காவல்துறை டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

திருடப்பட்ட நகைகளை மீட்டதுடன், S$1,000 ரொக்கம், நான்கு ஈஸி-லிங்க் அட்டைகள், ஒரு தொப்பி, ஒரு பொய் சிகை (wig) ஆகியவற்றையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

சுவான் டிரைவ் வீட்டுத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, டிசம்பர் 10 அன்று ஹுவாங் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுவரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

வழக்கு டிசம்பர் 17ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்