சிங்கப்பூர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, அவற்றைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் செயல்களில் ஈடுபட்ட சரவாக்கைச் சேர்ந்த குற்றக் கும்பலில் இடம்பெற்ற ஆடவருக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஐந்து ஆண்டு, 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
35 வயது மலேசியரான டான் காங் யுங்கிற்கு $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதி வழங்கும் செயல்முறைகளைக் குறிவைத்து, அவற்றைத் தவறாகப் பயன்படுத்திய அந்தக் கும்பலிலிருந்து கைது செய்யப்பட்டவர்களில், குற்றத்தை ஒப்புக்கொண்ட முதல் நபர் டான்.
முறைகேடான கணினிப் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். அவரது தண்டனை விதிப்பின்போது மேலும் 25 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சரவாக்கில் டான் வசித்தபோது, வட்டிக்குப் பணம் கொடுக்கும் செயல்களில் ஈடுபடும் உரிமம் பெறாதவர்களிடம் கடனைத் திரும்பக் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டதாக நீதிமன்றத்தில் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

