மோசடிப் பணம் உட்பட S$2.4 மில்லியன் மாற்றப்பட்டதாகச் சந்தேகம்

சட்டவிரோதப் பணமாற்றுச் சேவை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
3a7aaa61-54e0-4bfa-95ec-a011fefd2585
‌ஷான் கோ சாவ் லுன், அவருடைய நிறுவனத்தின் பெயரில் பணமாற்றுக் கணக்கைத் தொடங்கியது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவருடயை வழக்கு மீண்டும் அடுத்த மாதம் (ஜனவரி 2026) 15ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆடவர் ஒருவர், வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெறுவதற்காகப் பணமாற்று நிறுவனமான வைஸ் ஏ‌ஷியா பசிபிக்கில் கணக்கைத் தொடங்கியதாய்த் தெரியவந்துள்ளது.

அந்தக் கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்து கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பவுண்டு (S$2.4 மில்லியன்) அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் குறைந்தது 75,050 பவுண்டு, குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ஜெர்மனியில் ஆள்மாறாட்ட மோசடியில் பாதிக்கப்பட்ட இருவர், அந்தப் பணத்தை அனுப்பியதாகத் தெரிகிறது.

34 வயது ‌ஷான் கோ சாவ் லுன், பணம் எங்கிருந்து வந்தது என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. உரிமமின்றிப் பணமாற்றுச் சேவைகளை அவர் வழங்கியதாக வியாழக்கிழமை (டிசம்பர் 4) குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் நடந்ததாகச் சொல்லப்பட்ட வேளையில், அவர் ‘டே பிரேண்ட்’ (Day Brand) எனும் உள்ளூர் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.

கோ, அவருடைய நிறுவனத்தின் பெயரில் பணமாற்றுக் கணக்கைத் தொடங்கியது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மின்னிலக்க நாணயங்களை வாங்குவது, விற்பது தொடர்பான வணிகத்தில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

பினான்ஸ் (Binance), தற்போது எச்டிஎக்ஸ் (HTX) என்று அழைக்கப்படும் ஹுவோபி (Huobi) போன்ற மின்னிலக்க நாணயத் தளங்களில் அவர் விளம்பரம் செய்ததாகவும் காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

ஆர்வத்துடன் இருந்தவர்கள், கோவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் கணக்கிற்குப் பணத்தை மாற்றியதாகச் சொல்லப்பட்டது.

2022ஆம் ஆண்டு மே 10ஆம் தேதிக்கும் ஜூன் 17க்கும் இடையில் வெளிநாட்டு வைஸ் கணக்குகளிலிருந்து அதற்குக் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பவுண்டு மாற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கோவின் வழக்கு மீண்டும் அடுத்த மாதம் (ஜனவரி 2026) 15ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்