சிங்கப்பூரில் மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் (2025) முற்பாதியில் சென்ற ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 21.2 விழுக்காடு கூடியிருக்கிறது.
2025இன் முதல் ஆறு மாதங்களில் அத்தகைய 807 சம்பவங்கள் பதிவாயின. போன ஆண்டின் முற்பாதியில் அந்த ண்ணிக்கை 666ஆக இருந்தது.
மானபங்கச் சம்பவங்களின் விகிதம் ஒட்டுமொத்தக் குற்றச்செயல்களில் 7.8 விழுக்காடு.
பொதுப் போக்குவரத்தில் பெரும்பாலான குற்றச்செயல்கள்
மானபங்கச் சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களே.
பொதுப் போக்குவரத்து, நடைபாதைகள் முதலியவற்றில் நடந்த அத்தகைய குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இவ்வாண்டின் முற்பாதியில் பொதுப் போக்குவரத்தில் பதிவான குற்றச்செயல்களின் எண்ணிக்கை 90. போன ஆண்டில் அந்த எண்ணிக்கை 64ஆக இருந்தது.
பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்புக்குள் குற்றங்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகளைப் பரப்பக் காவல்துறை முயற்சி எடுத்துவருகிறது. எஸ்பிஎஸ் டிரான்சிட் (SBS Transit), எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷன் (SMRT Corporation), நிலப் போக்குவரத்து ஆணையம், தேசியக் குற்றத்தடுப்பு மன்றம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுடனும் அமைப்புகளுடனும் தொடர்ந்து பணியாற்றப்போவதாக அது கூறியது.
பொதுப் போக்குவரத்தைத் தவிர மானபங்கச் சம்பவங்கள் பொதுவாகக் குடியிருப்பு வளாகங்களிலும் கடைத்தொகுதிகளிலும் நடக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
குடியிருப்பு வளாகங்களில் அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை கூடியது. கடைத்தொகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை குறைந்தது.
பொதுப் பொழுதுபோக்குக் கூடங்களில் நிலைமை தொடர்ந்து நிலையாக இருந்தது. இவ்வாண்டின் முற்பாதியில் 54 சம்பவங்கள் பதிவாயின. சென்ற ஆண்டில் அந்த எண்ணிக்கை 51ஆக இருந்தது.
அந்தரங்கத்தைப் படம் பிடித்த சம்பவங்கள்
அந்தரங்கத்தைப் படம் பிடித்த சம்பவங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டின் முற்பாதியில் 258ஆக இருந்தது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அது 252க்குக் குறைந்தது.
ஒட்டுமொத்தக் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் அது 2.4 விழுக்காடு.
இருப்பினும் அந்தரங்கத்தைப் படம் பிடிக்கும் குற்றச்செயல் தொடர்ந்து அக்கறைக்குரியதாக உள்ளது என்று காவல்துறை தெரிவித்தது.
குடியிருப்பு வளாகங்கள், கடைத்தொகுதிகள், பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு முதலியவற்றில் அத்தகைய குற்றச்செயல்களில் பெரும்பாலானவை நடந்தன.
குடியிருப்பு வளாகங்களில் அந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள்.
அதே நேரம், கடைத்தொகுதிகளிலும் பொதுப் போக்குவரத்திலும் குற்றம் புரிந்தோர் பாதிக்கப்பட்டோருக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என்று காவல்துறை சொன்னது.
கழிவறைகள், உடை மாற்றிக்கொள்ளும் அறைகள் உள்ளிட்ட பொது இடங்களைப் பயன்படுத்தும்போது விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்குக் காவல்துறை ஆலோசனை கூறுகிறது.