முழுநேர தேசிய சேவையாளர்கள் படித்தொகை அதிகரிப்பு

1 mins read
1722dcbc-8c37-415e-9e89-2d11f60edfb1
பெரும்பாலான முழுநேர தேசிய சேவையாளர்களுக்கான படித்தொகை ஏறத்தாழ 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடு வரை உயர்த்தப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முழுநேர தேசிய சேவையாளர்கள் அனைவருக்குமான படித்தொகை அதிகரிக்கப்படுகிறது.

இது ஜூலை 1லிருந்து நடப்புக்கு வரும்.

சிங்கப்பூர் ஆயுதப் படைகள், சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை ஆகியவற்றைச் சேர்ந்த முழு நேர தேசிய சேவையாளர்களின் மாதாந்தர படித்தொகை $35லிருந்து $75 வரை ஏற்றம் காணும்.

பெரும்பாலான முழுநேர தேசிய சேவையாளர்களுக்கான படித்தொகை ஏறத்தாழ 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடு வரை உயர்த்தப்படும்.

முழுநேர தேசிய சேவையாளர்களின் சொந்த செலவுகள், பயன்பாட்டுக்காக இப்படித்தொகை வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, அவர்களது சேவையின் முக்கியத்துவத்தை அங்கீகாரம் அளிக்கும் வகையில் படித்தொகை தரப்படுகிறது.

படித்தொகை போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய அது அடிக்கடி மறுஆய்வு செய்யப்படுவதாக தற்காப்புத் துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் திங்கட்கிழமை (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்காப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இத்தகவல்களை திரு ஹெங் வெளியிட்டார்.

கடந்த பத்தாண்டுகளில் முழுநேர தேசிய சேவையாளர்களுக்கான படித்தொகை மாற்றி அமைக்கப்படுவது இது நான்காவது முறையாகும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

ஆக அண்மைய மாற்றத்தின்படி, ஆரம்பநிலை முழுநேர தேசிய சேவையாளர் மாதாந்தர படித்தொகையாக $790 பெறுவார்.

தற்போது அது $755ஆக உள்ளது.

குறிப்புச் சொற்கள்