நட்டத்துக்கு விற்கப்படும் தனியார் வீடுகள் அதிகரிப்பு

நட்டத்துக்கு விற்கப்படும் தனியார் வீடுகள் அதிகரிப்பு

2 mins read
c9ad1d44-7901-4f94-b06a-b9e04af90a33
இரண்டாம் காலாண்டில் நடைபெற்ற மொத்த மறுவிற்பனைப் பரிவர்த்தனைகளில் 4.7 விழுக்காடு நட்டத்தில் முடிந்துள்ளதாகச் சொத்து ஆலோசனை நிறுவனமான ‘குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்ட்’ தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் தனியார் குடியிருப்புச் சொத்துகளின் விலை வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. நட்டத்தில் மறுவிற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் விகிதமும் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

சொத்து ஆலோசனை நிறுவனமான ‘குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்ட்’ தொகுத்த தரவுகளின்படி, இரண்டாம் காலாண்டில் நடைபெற்ற மொத்த மறுவிற்பனைப் பரிவர்த்தனைகளில் 4.7 விழுக்காடு நட்டத்தில் முடிந்துள்ளன. இது முந்தைய காலாண்டின் 3.7 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம் என்பதோடு, 2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு (5.3%) பதிவான மிக உயர்ந்த விகிதமாகும்.

எண்ணிக்கை அடிப்படையில், இக்காலகட்டத்தில் 134 வீடுகள் நட்டத்தில் மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளன. நட்டத்தில் விற்கப்பட்ட சொத்துகளில் பெரும்பான்மையானவை (64 விழுக்காடு) மத்திய நகர மையத்துக்கு உட்பட்ட வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளன.

எஞ்சிய 36 விழுக்காடு பரிவர்த்தனைகள் மத்திய நகர மைய வட்டாரத்துக்குச் சற்று அருகில் உள்ள பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் சமமாக (தலா 18%) பதிவாகியுள்ளன.

வீடுகளின் விலை ஏற்றம் மிதமான நிலையை எட்டியதால், வாங்குபவர்கள் கூடுதல் கவனத்துடனும் தேர்வுசெய்தும் சொத்துகளை வாங்கும் போக்கு அதிகரித்ததே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்டின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் வோங் சியான் யாங் குறிப்பிட்டார்.

இரண்டாம் காலாண்டில், ஒட்டுமொத்த தனியார் வீட்டு விலைக் குறியீடு 0.5 விழுக்காடு மட்டுமே உயர்ந்தது.

நட்டப் பரிவர்த்தனைகளின் விகிதம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுச் சராசரியான 5.3 விழுக்காட்டைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கொவிட்-19 கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகச் சந்தையில் நிச்சயமற்ற நிலை நிலவியபோது பதிவான 21.8 விழுக்காடு உச்சகட்ட அளவோடு ஒப்பிடுகையில், இது ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவான அளவே ஆகும்.

குறிப்புச் சொற்கள்