உயர்த்தப்பட்ட சில வாடகை கார் கட்டணங்கள் 2027 பிப்ரவரி வரை நீட்டிப்பு

உயர்த்தப்பட்ட சில வாடகை கார் கட்டணங்கள் 2027 பிப்ரவரி வரை நீட்டிப்பு

கோப்புப் படம்: கம்ஃபர்ட்டெல்குரோ

27 Nov 2026 - 9:27 pm

2 mins read

எரிபொருள் விலை தொடர்ந்து அதிகமாக இருப்பதால் கம்ஃபர்ட்டெல்குரோ, ஸ்ட்ரைட்ஸ் பிரீமியர், கிராப்கேப் ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்களது தற்காலிகக் கூடுதல் கட்டணங்களை நீட்டித்துள்ளன.

இதன் காரணமாக, இந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் 2027 பிப்ரவரி 28 வரை உயர்த்தப்பட்ட கட்டணங்களைத் தொடர்ந்து செலுத்த வேண்டியிருக்கும்.

இவ்வாண்டு மார்ச் மாதம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண மாற்றங்கள் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையவிருந்தன.

நவம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட தனித்தனி ஃபேஸ்புக் அறிவிப்புகளில், இந்த மூன்று நிறுவனங்களும் கட்டண நீட்டிப்பை உறுதிப்படுத்தின.

உயர்த்தப்பட்ட எரிபொருள் செலவை ஈடுகட்ட இந்தக் கூடுதல் கட்டணத் தொகை முழுவதும் ஓட்டுநர்களுக்கே நேரடியாகச் செல்லும் என்று அவை தெரிவித்துள்ளன.

மூன்று நிறுவனங்களிலும் அடிப்படைக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. தூரம் மற்றும் காத்திருப்பு நேரத்திற்கான கட்டண உயர்வை பிப்ரவரி 28 வரை தொடரப்போவதாகச் சிங்கப்பூரின் மிகப்பெரிய வாடகைக் கார் நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்துள்ளது.

பயணத்தின் வெவ்வேறு கட்டங்களில் வசூலிக்கப்படும் இந்தக் கட்டண உயர்வு, சாதாரண மற்றும் பெரிய வாடகைக் கார்களுக்கு 27 காசுகள் முதல் லிமோசின் கார்களுக்கு 39 காசுகள் வரை இருக்கும்.

அடிப்படைக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு ஒப்பந்தங்கள்

இதற்கிடையில், நவம்பர் 27ஆம் தேதி கையெழுத்தான இரண்டு கூட்டு ஒப்பந்தங்களின் கீழ், தொழிற்சங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் தனது வாடகைக் கார்கள் மற்றும் ‘ஜிக்’ தனியார் வாடகை வாகனத் தளத்தில் ஓட்டுநர்களின் வருமானத்தைப் பாதிக்கும் எந்தவொரு முடிவையும் கம்ஃபர்ட்டெல்குரோ இனி எடுக்க முடியாது.

கட்டணங்கள், வாகன வாடகை அல்லது தரகுத் தொகையில் செய்யப்படும் மாற்றங்களை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, தேசியத் தனியார் வாடகை வாகனங்கள் சங்கம், தேசிய வாடகைக் கார் சங்கம் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்படும்.

அவசரகாலச் சூழ்நிலைகளில் மட்டுமே கலந்தாலோசனையைத் தவிர்க்க முடியும் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசும் கம்ஃபர்ட்டெல்குரோவும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்