தந்தையைத் தாக்கியதாக நம்பப்படும் ஆடவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (மே 15) முன்னிலையானார். தாக்குதலால் தந்தையின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
73 வயது தந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் 43 வயது கோ குய் சுவாமீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் தந்தையைக் குத்தியதாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பங்கிட் சாலை வீட்டில் இருந்தபோது கோ தந்தையின் கையை இரண்டு முறை குத்தியதில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரி 7ஆம் தேதி தந்தையைக் கோ முகத்தில் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் மாதம் கோ குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மை ஆண்டுகளில் பெற்றொரைத் தாக்கும் சம்பவங்கள் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தாயைத் தாக்கிய 17 வயது இளையர் ஈராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்கும்படி தீர்ப்பளிக்கப்பட்டது.
டிசம்பர் 2023இல் 78 வயது தாயைத் தாக்கிய குற்றத்திற்காக 58 வயது ஆடவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

