இண்டிகோ விமானப் பிரச்சினையால் பல்லாயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இந்தியாவுக்கான சிங்கப்பூர்த் தூதர் சைமன் வோங்கும் ஒருவர்.
அவர் டிசம்பர் 5ஆம் தேதி இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகருக்குப் பயணம் மேற்கொள்ள இண்டிகோ நிறுவனத்தின் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார்.
இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் குழப்பத்தால் திரு சைமனின் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமது சக ஊழியரின் திருமணத்திற்குச் செல்லவிருந்த பயணம் ரத்தான குறுஞ்செய்தியைப் பதிவிட்ட அவர், “காத்திருந்த ஊழியருக்கு வருத்தம் தெரிவிக்க வார்த்தைகளே இல்லை,” என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், திருமணத் தம்பதிகள் ஏமாற்றமடையக் கூடாது என்பதற்காகத் திரு சைமன், இணையம் வழி திருமணத்தில் கலந்துகொண்டார்.
இந்தியக் கலாசார உடையை அணிந்தவாறு தமது கைப்பேசி வழி திருமணக் கொண்டாட்டத்தில் திரு சைமன் கலந்துகொண்டார். அது தொடர்பான படங்களை அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
“தூரத்தால் பிரிந்திருந்தாலும் திருமண உணர்வால் இணைவோம்,” என்று அவர் குறிப்பிட்டார். மேலும் தம்பதிக்குத் தன்னுடைய வாழ்த்துகளையும் திரு சைமன் பதிவிட்டார்.

