திருமணத்தைத் தவறவிட்டார் சிங்கப்பூர்த் தூதர்

இண்டிகோ பாதிப்பால் சிங்கப்பூரிலும் குழப்பம்

3 mins read
ba72b944-f7be-4afe-bef9-78166172b1e3
சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் இண்டிகோ சேவை முகப்புகளுக்குமுன் குவிந்த பயணிகள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து, தாமதம் ஆகியவை இந்தியாவில் மட்டுமன்றி சிங்கப்பூர்வாசிகளிடமும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டின் திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்கள் தொடங்கி, இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு விமானப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை ஏராளம். அதில் இண்டிகோவில் பயணிப்போரின் எண்ணிக்கையும் கணிசமானது என்பதால் இது அவர்களை இது பாதித்துள்ளது.

“இயற்கைச் சீற்றங்களால் விமானங்கள் தாமதமாவது, ரத்து செய்யப்படுவது இயல்பானது. ஆனால், இயந்திரக் கோளாறு, செயல்பாட்டுக் கோளாறுகள் காரணமாக ரத்து செய்யப்படுவது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துகிறது,” என்றார் தேக்கா பகுதியில் செயல்படும் ரங்கூன் பயண நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகஃபர் சாதிக்.

திருச்சியிலிருந்து வரவேண்டிய இரு விமானங்கள் தாமதமானதால் தமது வாடிக்கையாளர்கள் அறுவர் பாதிக்கப்பட்டதாகத் திரு சாதிக் கூறினார். குறிப்பாக, பள்ளி விடுமுறைக்காலம் என்பதால், இங்கிருந்து இந்தியா சென்ற சிலர் சிங்கப்பூர் திரும்ப முடியாமல் சிரமப்படுவதாக அவர் சொன்னார்.

“திருச்சிக்கு இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்கூட் விமானங்கள் மட்டுமே செல்வதாலும், அதிலும் நேரத் தேர்வுகள் இருப்பதாலும் கவனத்துடன் விமான முன்பதிவு மேற்கொள்ள வேண்டியிருக்கும். ரத்தானால் கட்டணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றாலும், திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாமல் போவது கடினமானது,” என்றார் திரு சாதிக்.

இவ்வகை இடையூறுகள், அதிலும் ஆண்டிறுதி நேரத்தில் ஏற்படுவது சுற்றுப்பயணிகளையும் பாதிக்கும் என்று கருத்துரைத்தார் அவர்.

தம் மனைவி சுப்ரியா, பாலர் பள்ளியில் பயிலும் மகள் அவீராவுடன் விடுமுறைக்கு இந்தியா சென்றுள்ளார் காமன்வெல்த் பகுதி குடியிருப்பாளர் சேத்தன். அடுத்த வாரம் பெங்களூரிலிருந்து சிங்கப்பூர் வரும் இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்துள்ள அவர், “விமானம் ரத்தாகலாம் என்ற கவலை உள்ளது. சிறுபிள்ளையுடன் பயணம் செய்வது கூடுதல் சிரமத்திற்கு ஆளாக்கும். அதற்குள் நிலைமை சீராக வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.

தமது வாடிக்கையாளர்கள் பலரும் இண்டிகோவில் பயணம் செய்வதைச் சுட்டிய தஞ்சை பயண நிறுவனத்தின் அப்துல் காதர், “அவர்கள் தற்போது பெரிதாகப் பாதிக்கப்படவில்லை; காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் மாற்று ஏற்பாடுகளையும் செய்கிறது. ஓரிரு நாள்களில் நிலைமை சரியாகிவிடும் என எதிர்பார்க்கிறேன்,” என்றார்.

சிங்கப்பூரின் ரெட்ஹில் பகுதியில் வசிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த தீப்திராஜன், வியாழக்கிழமையன்று கோல்கத்தாவுக்குச் சென்ற நிலையில், அங்கிருந்து புவனேஸ்வர் நகருக்குச் செல்ல இண்டிகோவில் முன்பதிவு செய்திருந்தார்.

“அதிகாலை கோல்கத்தாவில் இறங்கினேன். காலை 11 மணிக்குப் புவனேஸ்வர் புறப்பட வேண்டிய விமானம் ஏழு மணி நேரம் தாமதமானது. சில நாள்கள் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் நிலையில் இது தேவையற்ற நேர விரயம். இது குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தைக் குறைத்தது வேதனையளிக்கிறது,” என்றார். கோல்கத்தாவிலிருந்து சிங்கப்பூர் வரவேண்டிய இரு விமானங்களும் ரத்தாகியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், பயணம் முடிந்து திரும்புவது குறித்தும் கவலையடைந்துள்ளதாகச் சொன்னார்.

இந்தியாவுக்கான சிங்கப்பூர்த் தூதர் சைமன் வோங், இண்டிகோ விமானப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் பயணிகளில் தாமும் ஒருவர் எனத் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமது சக ஊழியரின் திருமணத்திற்குச் செல்லவிருந்த பயணம் ரத்தான குறுஞ்செய்தியைப் பதிவிட்ட அவர், “காத்திருந்த ஊழியருக்கு வருத்தம் தெரிவிக்க வார்த்தைகளே இல்லை,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலம் குன்றிய மனைவியைப் பார்க்கச் செல்வதில் தாமதம், தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கே செல்ல இயலாமல் இணையவழியில் இணைந்த இணையர், நேரத்தைப் போக்க நடனமாடும் காத்திருப்புப் பயணிகள் எனப் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) நள்ளிரவுக்குள் நிலைமை சீரடையும் என்றும் அடுத்த சில நாள்களில் முழுச் சேவைகளும் செயல்பாட்டு நிலைத்தன்மையும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிரமம் காரணமாக, ஸ்கூட், ஏர் இந்தியா ஆகிய விமானங்களின் கட்டணம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி திருச்சி சென்றுவர ஸ்கூட் விமானத்தின் கட்டணம் ஏறத்தாழ 750 வெள்ளிக்கும் மேலாக உள்ளது. அங்கிருந்து சிங்கப்பூர் வந்துசெல்ல, ஏர் இந்தியா கட்டணம் கிட்டத்தட்ட 650 வெள்ளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்