சாங்கி விமான நிலையத்தில் காலணிக்குள் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு இந்தோனீசியாவுக்குப் புறப்பட முயன்ற இந்தோனீசியருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சைஃபுதின் அல்ஃபித்ரோ என்ற அந்த 32 வயது ஆடவருக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) 10 மாதச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடலில் இயங்கும் கப்பலில் பணியாற்றிய சைஃபுதின், 2026 மார்ச்சில் அகமது என்பவரைச் சந்தித்தார். தாம் கொடுத்த கத்தியை ஜகார்த்தா புறப்படுவதற்குமுன் காலணிக்குள் மறைத்து வைக்குமாறு சைஃபுதினிடம் அகமது கேட்டுக்கொண்டார்.
நோய்வாய்ப்பட்ட சைஃபுதின் சிங்கப்பூர் வழியாக இந்தோனீசியா செல்ல ஆகஸ்ட் 27ஆம் தேதி இங்கு வந்தார். அன்றைய தினமே சாங்கி விமான நிலையத்தின் முனையம் 4ல் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரது வலது காலணிக்குள் கத்தி ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே தினம் கைதான சைஃபுதின்மீது ஆகஸ்ட் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
சைஃபுதின் விமானத்தில் கத்தியைக் கொண்டு சென்றிருந்தால் பேராபத்து ஏற்பட்டிருக்கும் என நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
