சிங்கப்பூரர்கள் நாட்பட்ட நோய்களைத் தடுப்பதையும் கையாள்வதையும் எளிதாக்கும் நோக்கில் ஐந்து சமூகச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன.
‘எஸ்ஜி சுகாதாரக் கூட்டணி’ என அழைக்கப்படும் இக்கூட்டு முயற்சி, மக்கள் தங்கள் உடல்நல அபாயங்களைப் புரிந்துகொள்ளவும் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் சமூகத்தில் உரிய ஆதரவு பெறவும் உதவுகிறது.
சிங்கப்பூர் நீரிழிவுச் சங்கம், தேசியச் சிறுநீரக அறநிறுவனம், சிங்கப்பூர்ப் புற்றுநோய்ச் சங்கம், சிங்கப்பூர் இதய அறநிறுவனம், பக்கவாத ஆதரவு நிலையம் ஆகியவை இதற்காக இணைந்துள்ளன.
புக்கிட் கேன்பராவில் சனிக்கிழமை (நவம்பர் 28) சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இதனை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார். தடுப்புச் சுகாதாரத்தை மேம்படுத்த என்எச்ஜி ஹெல்த், தேசியப் பல்கலைக்கழகச் சுகாதார அமைப்பு, சிங்ஹெல்த் ஆகிய மூன்று வட்டாரச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களுடன் இவ்வமைப்புகள் இணைந்து பணியாற்றும்.
‘ஐந்து நோய்கள், பல தொடர்புகள், நோய்த்தடுப்புக்கான ஒரு பொது வாய்ப்பு’ என்பதே இவ்வுடன்பாட்டின் மையக் கருப்பொருள் என்று தேசியச் சிறுநீரக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி யென் டான் கூறினார்.
“நீரிழிவு, சிறுநீரக நோய், இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் ஆகியவை பல அடிப்படை அபாயக் காரணிகளைப் பகிர்ந்துகொள்கின்றன. நீரிழிவு நோயால் ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக ரத்தச் சுத்திகரிப்புக்காக அதிகமான நோயாளிகள் வருவதைக் காண முடிகிறது,” என்றார் அவர்.
எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தவும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறியவும் சிங்கப்பூரர்கள் தங்கள் உடல்நலனைப் பேணவும் ஐந்து அமைப்புகளும் தங்கள் நிபுணத்துவத்தையும் கட்டமைப்புகளையும் ஒன்றிணைப்பது அவசியம் என்றார் அவர்.
சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங், “நோய்களுக்குப் பொதுவான வேர்கள் இருந்தால், மரபணுக்களை அவற்றின் ‘தாய்’ என்றும் வாழ்க்கைமுறையை ‘தந்தை’ என்றும் கூறலாம்.
“மரபணுக்களை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், வாழ்க்கைமுறையின் பல அம்சங்களைப் படிப்படியாக மேம்படுத்தலாம்,” என்றார். தூக்கம், உணவு, உடற்பயிற்சி, சமூக நடவடிக்கைகள் ஆகியவையே பல நாட்பட்ட நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முக்கியம் என்றார்.
சமூகச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதால் வளங்களையும் நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைத்து விரிவான சுகாதார ஆதரவை வழங்க முடியும்.
இதன்மூலம் பலனடையவுள்ள ஃபட்ஸ்ரினா சோப்ரி, 56, நீரிழிவு, இதயம், சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளார்.
“எனக்கு நீரிழிவு கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. மாரடைப்பு ஏற்பட்டது. மூன்று அடைப்புகள் இருந்ததால் குழாய் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நான் மறுத்துவிட்டேன்,” என்றார் அவர்.
சிறுநீரகங்கள் செயலிழந்ததால் ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சைக்குச் செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வமைப்புகள் ஒன்றிணைவது தம்மைப் போன்றோருக்கும் குடும்பத்தினருக்கும் சுகாதாரத் தகவல்களையும் பரிசோதனைச் சேவைகளையும் எளிதாகவும் விரைவாகவும் பெற உதவும் என்றார் அவர்.
