முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7ஆம் தேதி) முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் சிறைத் துறை, “ஈஸ்வரன் வீட்டுக் காவல் திட்டத்திற்குத் தகுதியுடையவர் ஆகிறார். அவர் மீண்டும் குற்றம் புரியும் சாத்தியம் குறைவு. மேலும், அவர் சிறையில் இருந்த காலத்தில் எந்தக் குற்றமும் புரியவில்லை என்பதுடன் அவருக்கு வலுவான குடும்ப ஆதரவு உள்ளது. இதன் அடிப்படையில் அவர் வீட்டுக் காவல் திட்டத்திற்குத் தகுதியுடையவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று சிறைத் துறை பேச்சாளர் விளக்கினார்.
சிறைத் தண்டனை பெற்ற ஒருவர் குறைந்தது 14 நாள்கள் அல்லது, நன்னடத்தைக்கான தண்டனைக் குறைப்புக் காலத்தை நீக்கிவிட்டு, எஞ்சிய தண்டனைக் காலத்தில் பாதியைச் சிறையில் கழித்தபின் அவர் வீட்டுக் காவல் திட்டத்திற்குத் தகுதி பெறுகிறார் என்று சிறைத் துறை கூறியது.
“ஒருவரின் சிறைக்காலத்தில் அவருடைய நடத்தை, மறுவாழ்வு ஆலோசனையில் அவருடைய ஆக்கபூர்வமான ஈடுபாடு போன்றவற்றின் அடிப்படையில் அவர் மதிப்பிடப்படுகிறார்,” என்று அந்தப் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.
“மற்ற கைதிகளைப்போல் ஈஸ்வரனும் சில குறிப்பிட்ட நிபந்தனைகளின்கீழ் வீட்டுக் காவலில் இருக்க அனுமதிக்கப்படுவார். அவர் வீட்டில் இருப்பதை உறுதிசெய்ய அவருக்குக் கண்காணிப்பு வில்லை பொருத்தப்படும். அவர் தனது நேரத்தைப் பணியில் ஈடுபடுவது, படிப்பது, அல்லது பயிற்சியில் ஈடுபடும் வண்ணம் பயனுள்ள வழிகளில் தனது நேரத்தைச் செலவிட வேண்டும். அத்துடன், அவர் சிறைத் துறை ஆலோசனை அமர்விலும் பங்கேற்க வேண்டும்,” என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்திற்குத் தகுதியான கைதிகளில் சுமார் 44 விழுக்காட்டினர் வீட்டுக் காவல் திட்டத்திற்கு இடமாற்றம் செய்யத் தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டனர் என்று சிங்கப்பூர் சிறைத் துறை கூறியது.
ஈஸ்வரன் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, ஊழல் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள், நீதித் துறை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது என்ற மற்றொரு குற்றச்சாட்டு என ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

