தன்னிடம் முன்னதாக வேலை பார்த்த பெண் ஊழியரை, அவரது வீட்டிலும் வேலையிடத்திலும் 35 வயது சுவென் டியோ ஜின் கியட் பின்தொடர்ந்து சென்றதுடன் தொல்லை தந்து அந்தப் பெண்ணுக்குத் தேவையின்றி பரிசுப் பொருள்களும் மின்னஞ்சல்களும் அனுப்பினார்.
இவ்வாறு பின்தொடர்ந்து தொல்லை தந்ததற்காக ஜனவரி 13ஆம் தேதி டியோவுக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அந்த 29 வயது பெண், டியோவின் கடையில் வேலை பார்த்தவர். வேலை செய்த அந்தக் காலகட்டத்தில் அந்தப் பெண்ணைத் தனக்குப் பிடிக்கும் என்று டியோ அவரிடம் கூறினார். இருப்பினும், டியோ திருமணமானவர் என்பதால் அந்தப் பெண் ஊழியர் மறுத்துவிட்டார்.
டியோவின் கடையை விட்டுச் சென்ற அந்தப் பெண், வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள கிளைகளுக்கு அனுப்பப்பட்டார்.
இதையடுத்து, அந்தப் பெண் வழக்கமாகச் செல்லும் இடங்களுக்கு டியோ சென்று அங்கு சுற்றித் திரியலானார்.
பெண்ணின் வீட்டினது கீழ்த்தளத்தையும் டியோ விட்டு வைக்கவில்லை.
இவ்வாறு டியோ ஜனவரி 2023 முதல் செப்டம்பர் 2024 வரை கிட்டத்தட்ட தினமும் செய்து வந்தார்.
விலையுயர்ந்த பை, உணவு, தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் குறிப்புகள் போன்றவற்றை டியோ அந்தப் பெண்ணுக்கு குறைந்தது நான்கு முறை அனுப்பியும் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, டியோவுக்கு எதிராகக் காவல்துறையிடம் அந்தப் பெண் ஏழு முறை புகார் அளித்தார்.
மூன்றிலிருந்து நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரியபோது ‘தேவையற்ற ஒரு கண்காணிப்பு கேமரா’ என்று டியோவின் நடத்தையை வருணித்திருந்தார்.

