போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த கணக்காளருக்குச் சிறைத் தண்டனை

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த கணக்காளருக்குச் சிறைத் தண்டனை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 May 2026 - 6:06 pm

1 mins read

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த கணக்காளர் ஒருவருக்கு 30 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்குத் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து 50 வயது டேனியல் சுன் லிங் பிங், பொருள், சேவை வரிச் சட்டத்தின்கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் நடத்திய பொருள், சேவை வரி தணிக்கை நடவடிக்கையின்போது சுன், போலி பரிவர்த்தனை ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

சுன்மீதான வழக்குக்கும் டியோ ஆ மோய் என்ற பெண்ணுக்கும் இடையே சம்பந்தம் உள்ளதாக வியாழக்கிழமை (மே 21) அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பெண், மெக்சிம் இங்கிரீடியன்ட்ஸ் இன்டர்னே‌‌ஷனல், மெட்ரிக்ஸ் இங்கிரீடியன்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்.

நிறுவனங்கள் தொடர்பில் $1.7 மில்லியனுக்கும் அதிகமான வரிகளைப் பெண் கட்டவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதையடுத்து வருமான வரி, பொருள், சேவை வரி தொடர்பான குற்றங்களுக்காக $3.5 மில்லியனுக்கும் அதிகமான தொகையை டியோ செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

மெக்சிம் நிறுவனத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்த சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், வர்த்தகம் தொடர்பிலும் பொருள், சேவை வரி தொடர்பிலும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி கேட்டது.

அந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்படி நியமிக்கப்பட்ட சுன், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

சுன் தமக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கிறார். $50,000 பிணையில் சுன் விடுவிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்