மானபங்கம்: மாதுக்குச் சிறை

மானபங்கம்: மாதுக்குச் சிறை

படம்: Alexstar - stock.adobe.com

09 Oct 2026 - 7:04 pm

1 mins read

ஆடவரையும் பதின்ம வயது சிறுவனையும் முத்தம் கொடுத்துப் பொதுவெளியில் மானபங்கம் செய்த மாதுக்கு 21 வார சிறைத் தண்டனை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) விதிக்கப்பட்டது.

கோ மெய் சீ என்ற அந்த 49 வயது மாது அறிமுகம் இல்லாத அந்த இருவரையும் பூன் லே கடைத்தொகுதியில் பீர் வகை மது அருந்திய போதையில் மானபங்கப்படுத்தினார்.

கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இரவு 11 மணியளவில் சம்பவம் நடந்தது. சகோதரர்களான அந்த இருவரில் ஆடவரின் வயது 23, அந்தச் சிறுவனின் வயது 16.

மானபங்கப்படுத்திய குற்றம், மது அருந்திவிட்டுப் பொதுவெளியில் ஒழுங்கற்ற நிலையில் நடந்துகொண்டது, மற்றவர்களுக்குத் தொல்லை விளைவித்தது ஆகிய ஒவ்வொரு குற்றத்தையும் மாது ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிப்பின்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

சம்பவத்தன்று மது அருந்திவிட்டு கடைத்தொகுதி அருகே சென்றுகொண்டிருந்த சகோதரர்களை அந்த மாது நெருங்கினார். யாரும் எதிர்பாராத நிலையில் அவர்களது சட்டையை இழுத்துப்பிடித்து வலது கன்னங்களிலும் உதடுகளிலும் வலுக்கட்டாயமாக முத்தமிட்டு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் என்று அரசாங்கத் துணை வழக்கறிஞர் ஜோவெல் லாய் தெரிவித்தார்.

சம்பவம் நடந்து மறுநாள் அதிகாலை 1.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டு பின் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டார். அப்படியிருந்தும், அதே ஆண்டு மார்ச் 5ஆம் தேதி, ஜூரோங் வெஸ்ட் காப்பிக் கடையில் குழப்பம் விளைவித்து மீண்டும் குற்றம் புரிந்தார்.

குறிப்புச் சொற்கள்