சிங்கப்பூரில் இணையம்வழி செய்யப்படும் வேலைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகக் கூறி மேற்கொள்ளப்படும் மோசடிககள் காரணமாகக் கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை குறைந்தது $10.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது.
அந்த மோசடிகள் தொடர்பாக 215 புகார்கள் பதிவாகியுள்ளன. இணையத்தளங்களில் வேலை செய்தாலோ, இணையம்வழி வர்த்தகங்களையும் ஆய்வுகளையும் மேற்கொண்டாலோ ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகச் சமூக ஊடகத்தில் வலம்வரும் வேலை விளம்பரம் குறித்து கவனமாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வாட்ஸ்அப், டெலிகிராம் வழியாகவும் மோசடிக்காரர்கள் நேரடியாகத் தொடர்புகொள்வதாகவும் பாதிக்கப்பட்டோர் கூறினர். மோசடிக்காரர்கள் வழக்கமாக மூன்று விதமான வேலைகளை வழங்குவதாகக் கூறி அதை செய்வதற்கு முதலில் கட்டணம் செலுத்தும்படி பாதிக்கப்பட்டோரிடம் கேட்டனர். அதையடுத்து கட்டங்கட்டமாக அவர்கள் கட்டணத்தின் தொகையை அதிகரிப்பர்.
முதல் வகை மோசடியில் பாதிக்கப்பட்டோர் குறிப்பிட்ட பொருள்களையோ செயலியையோ இணையம்வழி விற்கவேண்டும். குறிப்பிட்ட அளவில் விற்பனை நடந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மோசடிக்காரர்கள் கூறுவர்.
இரண்டாவது வகை மோசடியில் இணைய வர்த்தகங்களின் போலியான இணையத்தளங்களில் பதிவுசெய்யும்படி பாதிக்கப்பட்டோரிடம் மோசடிக்காரர்கள் கூறினர். மூன்றாவது வகையில், ஊக்கத்தொகையைப் பெற இணைய கருத்தாய்வை முடிக்கும்படி பாதிக்கப்பட்டோரிடம் கூறப்பட்டது. ஆய்வை முடிக்க அவர்கள் முன்பணம் செலுத்தும்படி அறிவுறுத்தப்படுவர். ஆனால் படிப்படியாக முன்பணத் தொகையை மோசடிக்காரர்கள் அதிகரித்துக்கொண்டே போவார்கள்.
மூன்று சூழல்களிலும் அளவுக்கு அதிகமான முன்பணத்தைச் செலுத்திய பிறகு அல்லது வாக்குறுதியளிக்கப்பட்ட ஊக்கத்தொகையைப் பெறாதபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பாதிக்கப்பட்டோர் அறிந்துகொண்டனர்.

