ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 91ஐ நோக்கிச் செல்லும் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 92ல் வியாழக்கிழமை (நவம்பர் 26) நடந்த விபத்தில் 78 வயது மாது ஒருவர் அன்றைய தினமே மரணமடைந்தார்.
சாலையைக் கடந்துகொண்டிருந்த பாதசாரியான அவரை, ஒரு கார் மோதியதில் அவர் காயமடைந்தார். தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாது, சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
அன்று காலை 8.25 மணிக்கு விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக காவல்துறை குறிப்பிட்டது. காரை ஓட்டிய 47 வயது ஆடவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
‘சிங்கப்பூர் விஜிலான்டெ’ என்று அழைக்கப்படும் சமூக ஊடகப் பதிவில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டு பிறகு அகற்றப்பட்ட புகைப்படங்களில், சாலையில் ஒரு மாது கிடப்பதையும், அவர் அருகே அவரை மோதியதாகச் சந்தேகிக்கப்படும் சிவப்பு நிறக் கார், அம்மாது பயன்படுத்திய பொருள்கள் வாங்கப் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டி ஆகியவற்றைக் காணமுடிந்தது.
அருகே வெள்ளை நிற வேனும், மற்றொரு காரும் காணப்பட்டன. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

