தென்கிழக்காசியப் பாரம்பரிய உடையான ‘கெபாயா’, யுனெஸ்கோவின் கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதையடுத்து அதன் விற்பனை 35 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்டு ஓராண்டான நிலையில் கெபாயா உடையின் தேவை அதிகரித்துள்ளதாக உள்ளூர் வணிகங்கள் குறிப்பிட்டன. இணையச் சந்தைகள், விளம்பரங்கள், தற்காலிகக் கடைகள் உள்ளிட்டவற்றின் மூலம் அவற்றை விற்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் முன்னெடுப்புகளின் கீழ், அக்கம்பக்க வட்டாரங்கள், கடைத்தொகுதிகள், அரும்பொருளகங்கள், சுற்றுலாத் தலங்களில், ‘கெபாயா’ உடைகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
கெபாயா மீதான ஆர்வம் அதிகரித்துவரும் அதே வேளையில், அந்த உடைகளைத் தயாரிப்பதில் ஈடுபடும் கைவினைக் கலைஞர்கள் பல்வேறு சவால்களைச் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குறைந்துவரும் துணி விநியோகம், பாரம்பரிய உடைகள்மீது இளையர்களுக்குக் குறையும் நாட்டம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதாக அவர்கள் கூறினர்.
சிட்டிஹால் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ‘லிட்டில் நியோன்யா பத்திக்கில்’ கெபாயா விற்பனை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 35 விழுக்காடு அதிகரித்ததாகச் சொல்லப்பட்டது.
அராப் ஸ்திரீட்டிலுள்ள ‘டோக்கோ அல்ஜுனிட்’ எனும் 85 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட வணிகம், கடந்த ஆண்டில் விற்பனை 25 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறியது. ஆனால் அடுத்த தலைமுறையில் அதனை யார் எடுத்து நடத்துவார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கடையை நடத்திவரும் திருவாட்டி சஹ்ரா அல்ஜுனிட், அவரின் தாத்தா தொடங்கிய தொழிலை மூன்றாவது தலைமுறையாகத் தாம் தொடர்வதாய்க் கூறினார். தமக்குப் பிறகு கடையை நடத்த எவருக்கும் ஆர்வம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

