புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் கட்டமைப்பு சோதிக்கப்படும் விதத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, ரயில்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு சேர்க்கும் சிறப்புத் தண்டவாளங்கள் பற்றிய பரிந்துரைகளுக்கு ஆணையம் அழைப்புவிடுத்தது.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் மின்சாரத் தண்டவாளங்களில் ஏற்படக்கூடிய பழுதுகளையும் சீரமைப்பின்மையையும் இன்னும் திறம்பட கண்டறிய ஆணையம் முற்படுகிறது.
அதைத் துல்லியமாகவும் கண்காணிப்புக் கேமரா அடிப்படையிலான கட்டமைப்பு மூலம் உடனடியாகவும் செய்யப் புதிய, தேவைக்கு ஏற்ற தீர்வுகளை ஆணையம் நாடுகிறது.
தீர்வுகளுக்காக இம்மாதம் 11ஆம் தேதி அழைப்புவிடுத்த ஆணையம், தேய்மானத்தால் ஏற்படும் மின்சாரத் தண்டவாளக் கோளாறுகள் தேவையில்லாத தடங்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டது.
“அது வழக்கமாக ஏற்படுவது அல்ல என்றபோதும் அது கவனிக்கப்பட வேண்டிய விவகாரம். அது மீண்டும் நடைபெறக் கூடாது,” என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சி நிலைய இணை இயக்குநர் பேராசிரியர் யாப் ஃபூக் ஃபா கூறினார்.
மின்சாரத் தண்டவாளக் கோளாறுகள் அதிக அளவில் வெப்பத்தை உண்டாக்குவதால் இன்சுலேட்டர் அல்லது இரும்பைக்கூட உருக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
16 கிலோமீட்டர் தூரம் கொண்ட புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் கட்டமைப்பு தற்போது வாரத்துக்கு மூன்று முறை வரை சோதிக்கப்படுகிறது.
தண்டவாளத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஊழியர்கள் நேரடி சோதனைகளை நடத்துகின்றனர். அத்தகைய பணிகளை அவர்களால் இரவு நேரத்தில் மட்டும்தான் செய்ய முடியும்.
தொடர்புடைய செய்திகள்
ஒட்டுமொத்த புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில்களையும் 2026ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் திட்டமிடுகிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிவரும் ரயில்கள் முதலில் அப்புறப்படுத்தப்படும்.
கேமரா அடிப்படையிலான தீர்வு தற்போதிருக்கும் கண்காணிப்பு ஆற்றல்களையும் சோதனை நடைமுறைகளையும் மேம்படுத்தும் என்று ஆணையம் சொன்னது.
பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் செங்காங்-பொங்கோல் இலகு ரயில் கட்டமைப்பிலும் அதைப் பொறுத்துவதற்கு ஆணையம் திட்டமிடுகிறது.