2026 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில், வசதிகுறைந்த சிங்கப்பூரர்களின் மருத்துவக் கட்டணங்களுக்கு உதவ மெடிஃபண்டு மருத்துவ அறக்கட்டளை நிதியிலிருந்து மொத்தம் $175.1 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
ஓராண்டில் வழங்கப்பட்ட ஆக அதிகமான மெடிஃபண்டு உதவித்தொகை இதுவாகும். முந்தைய ஆண்டைவிட இது $10 மில்லியன் அதாவது 6.1 விழுக்காடு அதிகம்.
1993 ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மெடிஃபண்டு, அரசாங்க மானியங்களைப் பெற்ற பிறகும், மெடிஷீல்டு லைஃப் தேசியக் காப்புறுதி, மெடிசேவ் சேமிப்பு ஆகிய பிற வழிகளைப் பயன்படுத்திய பிறகும் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த இயலாத சிங்கப்பூரர்களுக்கு உதவுகிறது. கடந்த நிதியாண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3.8 விழுக்காடு உயர்ந்து 1.14 மில்லியனைத் தாண்டியது.
பொதுச் சுகாதார நிலையங்கள், இடைநிலை, நீண்டகாலப் பராமரிப்பு நிலையங்கள் ஆகிய இரண்டிலும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை அதிகரித்துள்ளது. பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள் போன்ற பொதுச் சுகாதார நிலைய நோயாளிகளுக்கு $125.6 மில்லியன் வழங்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட $6.6 மில்லியன் (5.5%) அதிகம். சமூக மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள் போன்ற இடைநிலை, நீண்டகாலப் பராமரிப்பு நிலைய நோயாளிகளுக்கான உதவி 7.5 விழுக்காடு உயர்ந்து $49.5 மில்லியனாகப் பதிவானது.
கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால் எந்தச் சிங்கப்பூரருக்கும் தகுந்த மானியச் சிகிச்சை மறுக்கப்படாது எனச் சுகாதார அமைச்சு நவம்பர் 27ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தது.
65 வயதுக்கு மேற்பட்ட, வசதிகுறைந்த சிங்கப்பூர் நோயாளிகளுக்காக மெடிஃபண்டு திட்டத்தின்கீழ் 2007 நவம்பரில் ‘மெடிஃபண்டு சில்வர்’ தொடங்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டுக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதால், அடுத்த நிதியாண்டு முதல் அதன் புள்ளிவிவரங்கள் தனியாக வெளியிடப்படாமல் ஆண்டு அறிக்கையில் ஒருங்கிணைக்கப்படும்.
இந்த நிர்வாக மாற்றம் வயது வேறுபாடின்றித் தகுதியுள்ள நோயாளிகளுக்குக் கிடைக்கும் உதவியைப் பாதிக்காது. மேலும், ஏப்ரல் 1ஆம் தேதி மூவாண்டுப் பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்ட 12வது மெடிஃபண்டு ஆலோசனை மன்ற உறுப்பினர்களின் பட்டியலும் ஆண்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
ஷியர்ஸ் ஹெல்த்கேர் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டி.கே.உதய்ராம் தொடர்ந்து அம்மன்றத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
