தேர்தல் சிங்கப்பூரின் நீண்டகால நலன் பற்றியது: எட்வின் டோங்

2 mins read
3a3932f7-ca05-4763-8924-21cf65d8740e
வேட்பாளர் அணியை வழிநடத்தும் அமைச்சராகத் திரு டோங் இடம்பெறுவாரா என்பது குறித்துக் கேட்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் ஒவ்வொரு வாக்கையும் முக்கியமாகக் கருதும் மக்கள் செயல் கட்சி, எதையும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார். ஈஸ்ட் கோஸ்ட் திட்டம் குறித்த விவரங்களுடனான இணையத்தளம் ஒன்றை மக்கள் செயல் கட்சி செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 15) அறிமுகம் செய்தபோது திரு டோங் செய்தியாளளிடம் பேசினார்.

பிடோக் உணவு நிலையம் மற்றும் சந்தையில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. திரு எட்வின் டோங், முன்னாள் நாடாளுமன்ற நாயகர் ஜெசிக்கா டான் ஆகியோருடன் மக்கள் செயல் கட்சியின் புதுமுகங்கள் ஹஸ்லீனா அப்துல் ஹலிம், கோ பெய் மிங் ஆகியோரும் இந்த இணையத்தளத்தை அறிமுகம் செய்தனர்.

2020ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி கடும் போட்டி தந்தது பற்றிய கேள்விக்கு, எல்லாத் தேர்தலுமே கடினமானது என்று திரு டோங் கூறினார்.

2020ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 53.39 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது. பாட்டாளிக் கட்சி 46.61 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

மேம்பட்ட வசதிகள் கொண்டுள்ள வரைபடங்களுடன் அந்த வட்டாரத்தில் தற்போது மேம்படுத்தப்பட்டுவரும் இடங்களை இந்த இணையத்தளம் காட்டுகிறது.

2020 முதல் 2025 வரை ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் குடியிருப்பாளர்க்குச் செய்யப்பட்டவற்றை இந்த இணையத்தளம் பிரதிபலிக்கிறது.

வேட்பாளர் அணியை வழிநடத்தும் அமைச்சராகத் திரு டோங் இடம்பெறுவாரா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஒப்புதலுக்குப் பிறகு அணியினர் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஒட்டுமொத்த ஊழியர் செயல்பாடுகளுக்கான துணைத் தளபதி கோ பெய் மிங் ஈஸ்ட் கோஸ்ட் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த திரு டோங், “பெய்மிங் ஈஸ்ட் கோஸ்டில் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக அடித்தளத் தொண்டூழியராகச் செயலாற்றியுள்ளார்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்