இணையக் குற்றங்களின் பெருக்கமும் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியும் உலகெங்கிலும் உள்ள வழக்கறிஞர்களுக்கும் குற்றவியல் நீதி அமைப்புகளுக்கும் இதுவரையில்லாத புதிய சவால்களை உருவாக்கியுள்ளதாகச் சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
இந்தச் சவால்களைச் சமாளிக்க வழக்கறிஞர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்களாகவும் பல்துறை மற்றும் புதுமையான மனப்பான்மையைக் உள்ளவர்களாகவும் அனைத்துலக பங்காளித்துவங்களை மேலும் வளர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங் கூறினார்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 8) ஷங்ரிலா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற அனைத்துலக வழக்கறிஞர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு மாநாடு மற்றும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய திரு டோங், அவ்வாறு கூறினார்.
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் நடத்திய மாநாடு செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க, கிட்டத்தட்ட 90 நாடுகளைச் சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) நடைபெற்ற மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய அதிபர் தர்மன் சண்முகரத்னம், அனைத்துலகச் சட்டமீறல் பற்றியும் அதனால் நிலைத்தன்மை பாதிக்கப்படுவது பற்றியும் பொது அமைப்புகளின் நம்பிக்கையின்மை பரவலாக வளர்வது பற்றியும் குறிப்பிட்டார்.
எல்லை தாண்டிய குற்றங்களைக் கூடுதல் செயல்திறனுடன் கையாள வழக்கறிஞர்கள், வழமையாகப் பயன்பட்டுவரும் திறன்களுக்கும் மேலாக தொழில்நுட்பத்தை அரவணைக்கும்படியும் அனைத்துலக அளவில் கூட்டாகச் செயல்படியும் திரு டோங், திங்கட்கிழமையின்போது வலியுறுத்தினார்.
“பணமோசடி மற்றும் பத்திர மோசடி போன்ற நிதிக் குற்றங்களின் அனைத்துலக பெருக்கத்தை நாங்கள் காண்கிறோம்” என்று அமைச்சர் கூறினார்.
அனைத்துலக அமைப்பான இன்டர்போல், ஆண்டுதோறும் 2 டிரில்லியன் முதல் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான சட்டவிரோத வருமானம் உலகளாவிய நிதிக் கட்டமைப்பு மூலம் அனுப்பப்படுவதாக மதிப்பிடப்படுகிறது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மோசடிகளால் $456.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.