ஆசியான் சுற்றுலா மன்றம் வழங்கும் ‘ஆசியான் சமூக அடிப்படையிலான சுற்றுலா விருதைப்’ (Community-based tourism Award) பெற்றுள்ளது லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா).
சமூகத்தின் கலாசார, பாரம்பரிய வளங்களைப் பாதுகாத்து, ஆதரிப்பதில் பங்களிப்பது, அக்கூறுகளைச் சுற்றுப்பயணிகளிடம் கொண்டுசெல்வது, பல்வேறு நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் மூலம் அதிக எண்ணிக்கையில் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல வகைச் செயல்பாடுகளுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசியான் சுற்றுலா மன்றம் 2017ஆம் ஆண்டுமுதல் சுற்றுலாத் தரநிலைக்கான விருதுகளை வழங்கிவருகிறது.
ஜோகூர் பாருவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான ‘ஆசியான் சுற்றுலாத் தரநிலை விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர் துறை, வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் இந்த விருதை வழங்கினார்.
ஜப்பான், இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் பேராளர்களும் பங்கேற்ற இவ்விழாவில், லிஷா தலைவர் ரகுநாத் சிவா இவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.
“தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைக் காலங்களில் வெவ்வேறு வகை நிகழ்ச்சிளுக்குச் சங்கம் ஏற்பாடு செய்துவருகிறது. தொடர்ந்து லிட்டில் இந்தியா வட்டாரத்துக்குச் சுற்றுப்பயணிகளை அவை ஈர்க்கின்றன. சமூகத்துக்காக லிஷா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் ரகுநாத் சிவா.
“சுற்றுப்பயணிகள் அதிகரித்தால், லிட்டில் இந்தியாவின் வர்த்தகர்களுக்கு உதவியாக இருக்கும். அது லிஷா உறுப்பினர்கள் மட்டுமின்றி, அவ்வட்டாரத்தைச் சேர்ந்த மற்ற வணிகர்களையும் சமூகம் சார்ந்த கூடுதலான நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த விருது சமூக அடிப்படையிலான செயல்பாடுகளில் அனைவரது ஒத்துழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம்,” என்று சொன்னார் லிஷாவின் கௌரவச் செயலாளர் ருத்ராபதி. இதில் துணை அமைச்சர் ஆல்வின் டான், செயற்குழு உறுப்பினர்கள், பிற சமூக அமைப்புகள், லிஷா உறுப்பினர்கள், வர்த்தகர்கள் என அனைவரது பங்கும் இன்றியமையாதது,” என்று அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒன்றிணைந்த சமூக உணர்வைக் கொடுப்பது, சுற்றுப்பயணிகளிடையே லிட்டில் இந்தியாவைப் பிரபலமாக்குவது, பல்வேறு இன மக்களுக்குத் தனித்துவமான மரபுக்கூறுகளைக் கொண்டுசெல்வது எனப் பல நடவடிக்கைகளை லிஷா மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கு இந்த விருது கிடைத்தது பெருமை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.