கூகல் தளத்தில் இணையவாசிகள் இந்த ஆண்டு அதிகம் தேடிய முக்கிய வார்த்தைகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?
டீப்சீக், சார்லி கர்க், அடைமான விவரம். இவைதான் முதல் மூன்று நிலைகளில் வந்த சொற்கள்.
நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், எலும்புத் தேய்மானப் பிரச்சினை முதலியவற்றுக்கான சிகிச்சை பற்றி மக்கள் அக்கறை கொண்டிருந்தனர். அவை இரண்டும் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்தன.
கூகல் நிறுவனம் இந்த ஆண்டு அதன் தேடுதளத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் குறித்த பட்டியலை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) வெளியிட்டது.
சிங்கப்பூரில் அதிகம் தேடப்பட்ட செய்திகளின் பட்டியலில் பணம் தொடர்பானவை முதல் ஐந்து நிலைகளில் மூன்றைப் பிடித்தன. அடைமானம் முதலிடத்திலும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டு, சிடிசி பற்றுச்சீட்டு ஆகியவை மூன்றாம், நான்காம் நிலைகளில் வந்தன.
இரண்டாம் இடத்தைப் பிடித்தது ஐஃபோன் 17. ஐந்தாம் இடத்தில் வந்தார் முன்னாள் நடிகர் இயன் ஃபாங். பாலியல் குற்றங்களின் தொடர்பில் அவருக்கு 40 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அனைத்துலகச் செய்திகளைப் பொறுத்தவரை சார்லி கர்க், ஐஃபோன் 17, டிரம்ப் தீர்வைகள், இஸ்ரேல்-ஈரான் பூசல், இந்தியா-பாகிஸ்தான் பூசல் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் வந்தன.
உள்ளூர்ப் பிரபலங்களில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் முதல் ஐந்து நிலைகளில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், முன்னாள் நடிகர் இயன் ஃபாங், பாட்டாளிக் கட்சியின் அலெக்சிஸ் டாங், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான், துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் வந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலகப் பிரபலங்களைப் பொறுத்தவரை டோனல்ட் டிரம்ப், லேடி காகா, ஏண்டி பைரன், நமேவீ, அலெக்சாண்டர் இசாக் ஆகியோர் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தனர்.

