லிட்டில் இந்தியா வீட்டில் தீ; 88 வயது ஆடவர் மரணம்

லிட்டில் இந்தியா வீட்டில் தீ; 88 வயது ஆடவர் மரணம்

1 of 2
படம்: சாவ்பாவ்
படம்: சாவ்பாவ்

05 Aug 2026 - 7:28 pm

1 mins read

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இருக்கும் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் மூண்ட தீயில் 88 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

அச்சம்பவம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் காவல்துறை புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்தது.

ரேஸ் கோர்ஸ் ரோடு புளோக் 684ல் உள்ள வீடு ஒன்றில் தீ மூண்டது. அதனைத் தொடர்ந்து நினைவிழந்த நிலையில் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் உயிரிழந்த முதியவரும் ஒருவர்.

அந்த மூவரும் வேறு இருவரும், ஐந்தாம் தளத்தில் இருக்கும் சம்பந்தப்பட்ட வீட்டில் சிக்கியிருந்தனர். அவர்களைக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் மீட்டன.

தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் திங்கட்கிழமை இரவு 7.10 மணிக்குத் தகவல் கிடைத்தது. ரோச்சோர் அக்கம்பக்கத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வீட்டில் இருந்தோரைக் காப்பாற்ற அதற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அவ்வீட்டில் இருந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் மீட்டனர். சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டோரில் அவரும் ஒருவர்.

மற்ற நால்வரை சிறிது நேரம் கழித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்டது. தீயணைப்பாளர்கள் சென்றடைந்தபோது வீட்டின் படுக்கையறைகளில் ஒன்றில் தீ எரிந்துகொண்டிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட மூவரும் 55லிருந்து 88 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்