இந்தியாவின் முன்னாள் அதிபரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவை அனுசரிக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ள அப்துல் கலாம் லட்சியக் கழகம் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்டது.
‘லிட்டில் இந்தியாவில் தூய்மைப் பணித் திட்டம்’ என்ற நிகழ்ச்சியை டாக்டர் அப்துல் கலாமின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் கழகம் ஏற்று நடத்துகிறது.
சனிக்கிழமை, ஜூன் 21ஆம் தேதி காலை 8.30 மணிக்குக் கிட்டத்தட்ட 50 தொண்டூழியர்கள் கேம்பல் லேனில் உள்ள இந்திய மரபுடைமை நிலையத்தில் கூடினர்.
தூய்மைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் இறைவனடி சேர்ந்த ஜோதி ஸ்டார் புஷ்பக்கடை உரிமையாளர் திரு முருகையா ராமச்சந்திராவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய மரபுடைமை நிலையத்தின் ஆலோசனைக் குழுத் தலைவர் திரு ஆர். ராஜாராம் கலந்துகொண்டார். அவர் டாக்டர் அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்துவது அவசியம் என்றும் திரு ராஜாராம் குறிப்பிட்டார்.
தேசியச் சுற்றுப்புற வாரியம் தூய்மைப் பணிகளுக்கான குப்பைப் போடும் பைகளையும் கருவிகளையும் வழங்கி திட்டத்துக்குப் பங்காற்றியது.
காலை சுமார் 8.30 மணியிலிருந்து 11 மணி வரை தொண்டூழியர்கள் 8 குழுக்களாகப் பிரிந்து ஜாலான் புசார், மெக்பர்சன், ரோவெல் சாலை ஆகிய பல இடங்களில் குப்பைகளை எடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“இதுபோன்ற சுற்றுச்சூழலைக் காக்கும் முயற்சிகளைத் தொடரவேண்டும் என்று தொண்டூழியர்கள் பலரும் கேட்டுள்ளனர். அதோடு பிள்ளைகளையும் இதில் அதிகம் ஈடுபடுத்தவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்,” என்று பகிர்ந்துகொண்டார் அப்துல் கலாம் லட்சியக் கழகத்தின் செயலாளர் திரு வெங்கடேசன் பாலசுப்பிரமணியன்.
ஆண்டுக்கு ஒரு முறை டாக்டர் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்படும் தூய்மைப் பணிகளைத் தவிர இதர சுற்றுப்புறப் பணிகளையும் கழகம் மேற்கொள்கிறது.
புக்கிட் பாத்தோக்கில் கிட்டத்தட்ட 60 மரக்கன்றுகளை நட்டது, கடற்கரைகளைச் சுத்தம் செய்வது ஆகியவை அவற்றுள் சில.
சிங்கப்பூரில் தொடர்ந்து தூய்மையைக் கட்டிகாக்க பல முயற்சிகளை எடுத்துவருவதாகக் கழகம் குறிப்பிட்டது.