உலக சராசரியோடு ஒப்பிடுகையில், சிங்கப்பூர்த் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீண்ட காலம் தங்கள் பதவியில் பணியாற்றுவதாக ரஸ்ஸல் ரெனால்ட்ஸ் நிறுவன உலகளாவிய தலைமை நிர்வாகிகளுக்கான குறியீடு தெரிவித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீட்டில் இருக்கும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் தங்கள் பதவியில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சராசரியாக 8.8 ஆண்டுகள் பணியாற்றியதாக வியாழக்கிழமை (நவம்பர் 27) வெளியான அந்தக் குறியீடு குறிப்பிட்டது.
மேலும், உலகளவில் அது 7.2 ஆண்டுகளாக உள்ளதாகவும் அது சொன்னது.
அதே வேளையில், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீட்டில் உள்ள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் குறுகிய காலமே அந்தப் பதவியில் பணியாற்றினர்.
அவர்கள் சாரசரியாக 3.7 ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்தனர்.
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு, ஹாங்காங்கின் ஹாங் செங், ஜப்பானின் நிக்கேய் 225, இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 50, ஆஸ்திரேலியாவின் ஏஎஸ் எக்ஸ் (ASX) 200 உள்ளிட்ட பங்குச் சந்தை குறியீடுகளில் உறுப்பினர்களாக இருக்கும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்கள் பதவியைவிட்டு விலகுவதை ரஸ்ஸல் ரெனால்ட்ஸ் நிறுவனக் குறியீடு கண்காணிக்கிறது.
ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் உயர் பதவி வகித்தவர்கள் சராசரி 5.9 ஆண்டுகள் அந்தப் பணியில் நீடித்தனர்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 6.1 ஆண்டுகளாக அது இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஒப்புநோக்கையில், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் பணியாற்றிய உயரதிகாரிகள் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் குறைவான காலமே தங்கள் பதவியில் இருந்ததாகத் தெரிகிறது.
“விரைவான சந்தை மாற்றத்திற்கேற்ப முறைப்படுத்தப்பட்ட மாற்றம் மற்றும் நடவடிக்கை, துரிதமாகச் செயல்பட இயக்குநர் சபை உறுப்பினர்கள் தரும் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாகக் குறுகிய காலம் அவர்கள் தங்கள் பதவியில் பணியாற்றி இருக்கலாம் என ரஸ்ஸல் ரெனால்ட்ஸ் நிறுவனம் கூறியது.
மேலும், உத்திபூர்வ உந்துதலைத் தக்கவைக்க வர்த்தக சுழற்சியின் ஆரம்பத்தில் தலைமை நிர்வாக அதிகாரிகளை மாற்ற மேற்குறிப்பிட்ட சில காரணங்கள் நிறுவனங்களைத் தூண்டிருக்கலாம் என்றும் அது சொன்னது.
இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து இதுவரை ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் பணியமர்த்தப்பட்ட புதிய தலைமை நிர்வாகிகளில் ஐந்தில் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் அதே நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என ரஸ்ஸல் ரெனால்ட்ஸ் கண்டறிந்தது.
உலகளவில் அந்த எண்ணிக்கை பத்தில் ஏழாக உள்ளதாக அது குறிப்பிட்டது.

