கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தில் உள்ள சோதனைச் சாவடியில் விளையாட்டுப் பொருள்கள் என்ற பெயரில் கடல்வழியாக வந்த சரக்குகளில் இரண்டு நீண்ட வாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைக் கடத்தல் முயற்சி என்று குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 16) வகைப்படுத்தி அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
பாசிர் பாஞ்சாங்கில் உள்ள சோதனை நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றை சோதனையிடும்போது அதன் உள்ளிருந்த பொருள்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அந்தக் கொள்கலனை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
விளையாட்டுப் பொருள்கள் என்ற பெயரில் அந்த நீண்ட வாள்கள் மற்ற பொருள்களுடன் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடல்வழியாக இறக்குமதி செய்யப்படும் பொருள்களைச் சோதனையிடும் மையங்களில் பாசிர் பாஞ்சாங்கில் உள்ள நிலையமும் ஒன்று.
சாங்கி, துவாஸ், ஜூரோங், மரினா, கெப்பல், செம்பவாங் போன்ற இதர இடங்களிலும் ஆணையத்தின் கடல் சோதனைச் சாவடிகள் இயங்குகின்றன.
காவல்துறை மேல் விசாரணையைத் தொடர்ந்து வருகிறது.
பயங்கர ஆயுதங்கள் சட்டப்படி, உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் வாள்களை பொது இடங்களில் வைத்திருப்பது குற்றமாகும்.

