சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் (எஸ்ஜிஎச்) அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், காத்திருப்பு நேரம் நீடிக்கக்கூடும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அதிக அளவிலான நோயாளிகள் வருவதாகவும், உள்நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கு அதிக தேவை நிலவுவதாகவும் வியாழக்கிழமை (அக்டோபர் 8 ) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகள் படுக்கை வசதியைப் பெறுவதற்கு வழக்கத்தைவிடக் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
எனினும், படுக்கைக்காகக் காத்திருக்கும் வேளையிலும் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து அவசரச் சிகிச்சைகளும் கவனிப்புகளும் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே தொடர்ந்து வழங்கப்படும் என்று மருத்துவமனை உறுதியளித்துள்ளது.
மேலும், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் நிலைமையைக் கருத்தில்கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமற்ற அல்லது சாதாரண உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், அருகில் உள்ள குடும்பநல மருந்தகம் அல்லது பலதுறை மருந்தகத்தில் சென்று சிகிச்சை பெறுமாறு எஸ்ஜிஎச் கேட்டுக்கொண்டுள்ளது.
“எங்கள் மருத்துவக் குழுவினர் அனைத்து நோயாளிகளையும் அர்ப்பணிப்புடன் கவனித்து வரும் வேளையில், பொதுமக்கள் பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று மருத்துவமனை நிர்வாகம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
