இவ்வாண்டு ஜனவரியிலிருந்து அக்டோபர் வரை குறைந்தது 722 கலைநிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடிகள் மூலம் $615,000க்கும் அதிகமான தொகையைப் பாதிக்கப்பட்டோர் இழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்தகைய மோசடிகள் டெலிகிராம், கெரோசல், எக்ஸ் ஆகிய சமூக ஊடகத் தளங்களிலும் குறுஞ்செய்தி தளங்களிலும் இடம்பெற்றன. அத்தகைய தளங்களில் பாதிக்கப்பட்டோர் கலைநிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகள் விற்பனையை நாடினர்.
பல்வேறு மோசடிச் சம்பவங்களில் மோசடிக்காரர்கள் போலியான நுழைவுச்சீட்டுகளையோ அவற்றுக்கான ரசீதுகளையோ காண்பித்து பாதிக்கப்பட்டோர் அவற்றை வாங்கும்படி வலியுறுத்துவார்கள்.
அத்தகைய நுழைவுச்சீட்டுகள் துரிதமாகத் தீர்ந்துவிடும் என்று கூறி பாதிக்கப்பட்டவர்கள் அவசரமாக அவற்றை வாங்கும்படி மோசடிக்காரர்கள் வற்புறுத்துவர். கட்டணம் செலுத்தியவுடன் நுழைவுச்சீட்டுகள் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுவது வழக்கம்.
ஆனால் கட்டணம் செலுத்திய பிறகும் பணம் கிடைக்கவில்லை என்றும் கூடுதல் பணம் செலுத்தும்படியும் மோசடிக்காரர்கள் குறிப்பிட்டனர்.
கட்டணத்துக்குப் பிறகு நுழைவுச்சீட்டுகள் கிடைக்காமல் போகும்போதும் விற்பனையாளர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போகும்போதும் பாதிக்கப்பட்டோர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
எனவே, அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் கலைநிகழ்ச்சிகள் குறித்து விழிப்பாக இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்துகிறது.
கொரியாவின் சூப்பர் ஜூனியர்’ஸ் ‘சூப்பர் ஷோ 10’ கலைநிகழ்ச்சி 2026 ஜனவரியில் சிங்கப்பூரில் இடம்பெறுகிறது. அதையடுத்து மார்ச் மாதம் செவண்டீன்ஸ் குழுவின் ‘செவண்டீன் வோர்ல்ட் டுவர்’ இசை நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மறுவிற்பனை செய்யப்பட்ட நுழைவுச்சீட்டுகளை வாங்கியோர் இசை நிகழ்ச்சிகளுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று காவல்துறை குறிப்பிட்டது.

