தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மண்டாய் சாலை விபத்தில் மாண்ட மெக்கேக் குரங்குகள்

2 mins read
ceab1ab0-89a9-4e33-add7-4f28f2fb2b2f
சாயாங் அவர் சிங்கப்பூர் கம்யூனிட்டி கேட்ஸ் (sayang Our Singapore’s Community Cats) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் காயங்களுடன் காணப்பட்ட இரண்டு குரங்குகளின் படம் பதிவேற்றப்பட்டிருந்தது. - படம்: சாயாங் அவர் சிங்கப்பூர் கம்யூனிட்டி கேட்ஸ்/ ஃபேஸ்புக்

சமூக ஊடகத்தில் பரவிவரும் படம் ஒன்றில் தலையில் காயங்களுடன் காணப்படும் இரண்டு குரங்குகள் சாலை விபத்தில் மாண்டவை என்று தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.

‘சாயாங் அவர் சிங்கப்பூர் கம்யூனிட்டி கேட்ஸ்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இதற்குமுன் காணப்பட்ட அந்தப் படம் செப்டம்பர் 4ஆம் தேதி பிற்பகல் வாக்கில் பதிவேற்றப்பட்டது.

அதில் இரண்டு ‘மெக்கேக்ஸ்’ ரகக் குரங்குகள் தலையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டன. படம் குறித்து எந்த விவரமும் பதிவிடப்படவில்லை.

மனிதர்களின் தலையீட்டால் குரங்குகளுக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள் சிலர் சந்தேகம் எழுப்பினர்.

மண்டாய் சாலையில் செப்டம்பர் 4ஆம் தேதி காலை 9.30 மணியளவில் இரண்டு பெரிய நீண்ட வால் குரங்குகளின் சடலங்கள், அதே ரகத்தைச் சேர்ந்த குட்டிக் குரங்கு குறித்து தகவல் கிடைத்ததாகத் தேசியப் பூங்காக் கழகம் சொன்னது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு அவசரக் குழுவை அனுப்பியதாகத் தெரிவித்த கழகம், இரண்டு பெரிய குரங்குகளின் சடலத்தை அப்புறப்படுத்தியதைக் குறிப்பிட்டது. குழு சம்பவ இடத்திலிருந்து மீட்ட குரங்குக் குட்டி சிறிது நேரத்தில் மாண்டது.

வனப்பகுதியில் உள்ள சாலைகளை விலங்குகள் கடந்து செல்லக்கூடும் என்பதால் வாகனம் ஓட்டுவோர் இன்னும் கவனமாக இருக்கும்படி தேசியப் பூங்காக் கழகம் வலியுறுத்தியது.

காயமடைந்த வனவிலங்குகளைச் சுயமாகக் கையாள வேண்டாம் என்றும் கழகம் நினைவுறுத்தியது.

சாலை விபத்துக்குள்ளாகும் விலங்குகளில் பாம்புகள் முதலிடத்தில் உள்ளன. 2021ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை ஏறக்குறைய 499 பாம்புகள் சாலை விபத்தில் மாண்டன.

அதே காலக்கட்டத்தில் 152 பல்லிகள், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய 115 விலங்குகள், 227 ஆமைகள் ஆகியவை சாலை விபத்தில் மாண்டன.

குறிப்புச் சொற்கள்