தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலாய்/முஸ்லிம் சமூகம் அதன் முன்னேற்றம், சாதனைகளை நினைத்துப் பெருமை கொள்ளலாம்: மூத்த அமைச்சர் லீ

2 mins read
1cedb1b3-fd28-49a3-9448-2484cb98f849
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் அவருடைய மனைவியும் நிகழ்ச்சிக்கு வரவேற்கப்படுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலாய்/முஸ்லிம் சமூகம் பெருமை கொள்வதற்கு ஏராளமாக சாதித்துள்ளதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

கல்வி, வேலை, இன, சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதில் அச்சமூகத்தின் பங்கு, அதன் தலைவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் போன்ற அம்சங்களில் அது அடைந்துள்ள முன்னேற்றத்தை அவர் கோடிட்டுக் காட்டினார்.

அச்சமூகம் தொடர்ந்து முன்னேறுவதற்கான தமது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

கடந்த 2004 முதல் 2024 வரை கௌரவத்துடனும் தனித்தன்மையுடனும் பிரதமராக நாட்டிற்குச் சேவையாற்றியதற்கு மூத்த அமைச்சர் லீக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுய உதவிக் குழுவான மெண்டாக்கியும் இதர மலாய்/முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ பேசினார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள் எம்.பி.க்கள், சமூக, சமயத் தலைவர்கள் உட்பட மலாய்/முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 600 பேர் கலந்துகொண்டனர்.

பல்வேறு ‘உணர்வுபூர்வ, முக்கிய’ விவகாரங்களை எதிர்கொள்ள அச்சமூகத்துடன் சேர்ந்து தாம் பணியாற்றியதை திரு லீ தமது உரையில் நினைவுகூர்ந்தார்.

தாதியர் பணியில் தலையங்கி அணிய அனுமதித்தது, குற்றவியல் தண்டனைச் சட்டத்திலிருந்து 377ஏ சட்டப் பிரிவை நீக்கியது, இஸ்ரேல்-ஹமாஸ் பூசல் உள்ளிட்டவை அவை.

“மலாய்/முஸ்லிம் சமூகம் இந்த விவகாரங்களை முதிர்ச்சியுடன் கையாண்டுள்ளது. அவர்கள் தங்களது பண்புநலன்களையும் கருத்துகளையும் நிலைநாட்டிய அதேவேளையில், மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட மற்றவர்களையும் மதித்து நடந்துகொண்டார்கள்,” என்றார் திரு லீ.

மலாய்/முஸ்லிம் தலைவர்களுடன் இதுபோன்ற விவகாரங்கள் குறித்து பணியாற்றிய சிறப்புரிமையை தாம் பொக்கிஷமாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

‘வெற்றிபெற்ற சமூகத்தைக்’ கட்டியெழுப்புவதில் மலாய்/முஸ்லிம் சமூகம் அடைந்துள்ள முன்னேற்றத்தை திரு லீ பட்டியலிட்டார்.

கூடுதலான மலாய்க்காரர்கள் வளர்ச்சித் துறைகளில் வேலையில் உள்ளனர். 2000 முதல் 2020 வரை ஒப்பிட்டுப் பார்த்தால் நிபுணர், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) வேலைகளில் இருந்த மலாய்க்காரர்களின் விகிதம் 23.4 விழுக்காட்டிலிருந்து 39 விழுக்காட்டாக அதிகரித்தது.

கல்வியைப் பொறுத்தமட்டில், மலாய்க்காரர்களிடையே பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் விகிதம் 2.1 விழுக்காட்டிலிருந்து 10.8 விழுக்காடாக அதிகரித்தது. உயர்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வி பெற்ற மலாய்க்கார இளையர்களின் விகிதம் ஏறத்தாழ 30 விழுக்காட்டிலிருந்து ஏறக்குறைய 80 விழுக்காடாகக் கூடியது.

கூட்டு மதரசா திட்டம் மூலம், இங்குள்ள மதரசாக்கள் வழங்கும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் சமூகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) வெற்றி கண்டுள்ளதை திரு லீ சுட்டினார்.

இரண்டாவதாக, இன, சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதில் மலாய்/முஸ்லிம் சமூகம் முக்கியப் பங்காற்றியுள்ளதாக திரு லீ கூறினார். சிங்கப்பூர், சமய சார்பற்ற நாடாக இருந்தாலும் இன, சமய ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடாக நமது அடையாளத்தை எண்ணி நாம் பெருமிதம் கொள்கிறோம் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்