சிங்கப்பூர்ப் பொறியியல் நிறுவனம் ஒன்றின் முன்னாள் மூத்த நிர்வாக இயக்குநர்மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டிஎஸ்ஓ தேசிய ஆய்வுக்கூடத்தின் ஊழியர்க்கு மறைமுகமாகக் கையூட்டு கொடுத்ததை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) ஜேசன் சுவா ஐக் லெங் என்ற அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
தேசிய பாதுகாப்பு வலிமையை மேலும் வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட சிங்கப்பூரின் மிகப்பெரிய பாதுகாப்பு ஆய்வு, உருவாக்க அமைப்பாக டிஎஸ்ஓ நிறுவனம் தனது இணையத்தளத்தில் குறிப்பிடுகிறது.
1997ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின்கீழ் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம், ஒரு தேசிய நிறுவனமாக அதன் தகுதியை வெளிப்படுத்தும் வகையில் டிஎஸ்ஓ தேசிய ஆய்வுக்கூடங்கள் எனப் பெயர் மாற்றம் கண்டது.
கையூட்டு வழங்கப்பட்ட குற்றத்திற்கான அடித்தளம் 2018ஆம் ஆண்டிலோ அதற்கு முன்போ போடப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
டிஎஸ்ஓ வசதி மேலாண்மைக் குழுவின் உதவி மேலாளராக அப்போதிருந்த போ பெங் சான், மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்ததாரர்களைத் தேடி வருவதாக, துணை ஒப்பந்தக்காரரான அலெக்ஸ் லீ இயூ ஹுவாட்டிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்ததாரருக்கு அந்தப் பணி கிடைத்தால், நன்றிக்கடனாகத் தமக்கு ஏதாவது தருமாறு போ கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
தீப்பாதுகாப்புக் கருவிகளைப் பொருத்தி, பராமரிப்புச் சேவைகளை வழங்கும் ஃபயர்-மெக் என்ற நிறுவனத்தின் மேற்பார்வையாளராக இருந்த லீ, போவின் கோரிக்கையைப் புரிந்துகொண்ட ஒப்பந்தாரர் திட்டத்தைப் பெற்றுத் தருவதற்குப் பணம் கேட்கிறார் என்பதை அறிந்துகொண்டதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து, வா லூன் எஞ்சினியரிங் நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குநரும் பங்குதாரருமான சுவாவை லீ தொடர்புகொண்டு, திட்டத்தைப் பெற தம்முடன் இணைந்து பணியாற்ற சம்மதமா என்று கேட்டதாகக் கூறப்பட்டது.
