ஆடவர் ஒருவர் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது சக பயணி ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் பேருந்துமீது போத்தலை வீசிக் கண்ணாடியை உடைத்தார்.
இதில் 57 வயதுப் பெண் பயணி ஒருவர் காயமடைந்தார். அவருக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி நடந்தது.
பேருந்துச் சேவை எண் 190ல் பயணம் செய்தபோது 38 வயது குஸ்டாஸா கமரூதீன் மதுபானம் குடித்துள்ளார். மாலை 6.40 மணிக்கு ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறங்கும்போது அவருக்கும் சக பயணி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேருந்திலிருந்து இறங்கிய கமரூதீனைப் பார்த்துச் சக பயணி தவறான சைகையைக் காட்டியுள்ளர். இதனால் கோபமடைந்த கமரூதீன் பேருந்துமீது போத்தலை வீசினார்.
சம்பவம் நடந்த மூன்று நாள்களுக்குப் பிறகு கமரூதீன், 38, கைது செய்யப்பட்டார். அவர் சிங்கப்பூர் குடிமகன்.
பிணையில் வெளிவந்த அந்த ஆடவர் கடையில் மதுப்போத்தல் ஒன்றையும் திருடினார்.
இந்நிலையில், புதன்கிழமை (டிசம்பர் 16) கமரூதீன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்கு டிசம்பர் 24ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

