ராஃபிள்ஸ் ஹோட்டலில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மொய்ப்பணப் பெட்டியை 38 வயது லீ யீ வெய் திருடிச் சென்றதாகக் கூறப்பட்டது.
அவர்மீது தங்குமிடத்தில் திருடியதாகச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
லீ தொடர்புடைய திருட்டுச் சம்பவம் குறித்து அக்டோபர் 17ஆம் தேதி இரவு 9.15 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
திருமண வரவேற்பின்போது, ஏறத்தாழ $1,500 ரொக்கம் இருந்த சிவப்பு அன்பளிப்பு உறைகள் அடங்கிய பெட்டியை அவர் எடுத்துச் சென்றதாகக் குறிப்பிட்டது.
அதன் தொடர்பில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், சம்பந்தப்பட்ட ஆடவரைக் கண்டறிந்து அக்டோபர் 18ஆம் தேதி கைது செய்தனர்.
“பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். முக்கியமாக, கொண்டாட்டங்கள், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் தங்களின் விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்,” என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
