அறிவார்ந்த மூக்குக்கண்ணாடியை அணிந்தபடி ராஃபிள்ஸ் கல்விக் கழக (ஆர்ஐ) மாணவிகளை ஆடவர் ஒருவர் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
அண்மையில் நடந்ததாக நம்பப்படும் அச்செயல் பதிவான காணொளி இணையத்தில் பலரால் பகிரப்பட்டுள்ளது. அதுகுறித்து ராஃபிள்ஸ் கல்விக் கழகம் காவல்துறையிடம் புகாரளித்துள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அது முடுக்கிவிட்டுள்ளது.
அச்சம்பவத்தைப் பள்ளி அறிவதாக ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தின் தலைமை ஆசிரியர் ஏரன் லோ வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) ஏஷியாஒன்னிடம் அறிக்கை மூலம் தெரிவித்தார்.
“மாணவர்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்,” என்றார் திரு லோ. அதைத் தொடர்ந்து காவல்துறையிடம் புகாரளித்ததோடு ராஃபிள்ஸ் கல்விக் கழகம் கூடுதல் பாதுகாப்புக்காகப் பள்ளிக்கு வெளியே பாதுகாப்பு அதிகாரிகளைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
“எங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தொடர்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம்,” என்றும் திரு லோ குறிப்பிட்டார்.
ஆடவர் ஒருவர் மாணவிகளைப் பின்தொடர்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது. அந்த ஆடவர் அறிவார்ந்த மூக்குக்கண்ணாடியை அணிந்திருந்ததாகவும் அவர் மாணவர்களை படமெடுத்திருக்கக்கூடும் என்றும் இணையவாசிகள் குற்றஞ்சாட்டினர்.
அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தலைதூக்கியது.
