சாலை விபத்தில் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிய ஆடவர்

1 mins read
afd3e77f-cdd5-45fa-9369-ffcbb956731c
தெம்பனிஸ் விரைவுச்சாலையில் நேர்ந்த விபத்தில் லாரி, வேன், இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. - படம்: சிங்கப்பூர் ரோட் அக்சிடன்ட்ஸ்/ ஃபேஸ்புக்

தெம்பனிஸ் விரைவுச் சாலையில் ஏற்பட்ட கடுமையான வாகன விபத்தில் லாரி ஒன்றின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்ட ஆடவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நான்கு வாகனங்கள் மோதிகொண்ட அந்த விபத்தில் ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை 5 மணியளவில் சிலேத்தார் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் விபத்து நேர்ந்தது. அதில் ஒரு லாரி, ஒரு வேன், இரண்டு கார்கள் ஈடுபட்டன.

லாரியில் சிக்கிக்கொண்ட ஓட்டுநரை மீட்புக் கருவிகளைக் கொண்டு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் விடுவித்தனர்.

30 வயது லாரி ஓட்டுநரும் ஐந்து பயணிகளும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அந்தப் பயணிகள் 22லிருந்து 46 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

இருவர் கூ டெக் புவாட் மருத்துவமனையிலும் நால்வர் செங்காங் பொது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

லேசான காயங்கள் ஏற்பட்ட மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படவேண்டாம் என்று தெரிவித்தனர்.

விபத்துக்குப் பிந்திய நிலையைக் காண்பிக்கும் சமூக ஊடக காணொளியில் லாரியின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே ஆடவர்கள் நிற்பதைக் காண முடிகிறது.

சாலையின் முதல் தடத்தில் விபத்து நேர்ந்ததையும் காணொளி காட்டியது.

காவல்துறை அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
ஆடவர்விபத்துலாரி