சிங்கப்பூரில் கடந்த மார்ச் மாதம், நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் தவறான கை சைகையைக் காட்டியதால் ஆத்திரமடைந்த ஆடவர் ஒருவர் அச்சிறுவனைத் தாக்கினார்.
37 வயது முகமது ஃபிர்தாவுஸ் மொக்தார் தன் மகனின் பள்ளித் தோழனான அந்தச் சிறுவனின் கையைப் பிடித்து அவனைப் பின்னோக்கிச் சுழற்றி வீசியதால், சிறுவன் கீழே விழுந்தான்.
மேலும், அந்தச் சிறுவனின் விரலை உடைத்து விடுவதாகவும் திங்கட்கிழமை மீண்டும் வந்து அவனைப் தேடப்போவதாகவும் ஃபிர்தாவுஸ் மிரட்டியிருந்தார்.
தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை (செப்டம்பர் 30) ஃபிர்தாவுசுக்கு 14 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவச் செலவான $170ஐ இழப்பீடாக வழங்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் பேசிய அச்சிறுவனின் தாய், அந்தச் சம்பவத்தால் தாம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தம் மகனுக்கு இன்னமும் கெட்ட கனவுகள் வருவதாகவும் கூறினார்.
தம் மகன் வேறு பாலர்பள்ளிக்கு மாற்றப்பட்டுவிட்டான் என்றும் அந்தத் துயரமான சம்பவத்தில் இருந்து அவன் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை என்றும் தாயார் தெரிவித்தார்.
நீதிமன்றக் கூண்டில் நின்ற ஃபிர்தாவுஸ், தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
